Tamil Bayan Points

ஆல்கஹால் பயன்படுத்தலாமா? அது கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

ஆல்கஹால் பயன்படுத்தலாமா? அது கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா?

பருகுவதுதான் தவறு.
வாசணைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம்.

ஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக் கூடிய வகையில் இதைப் பயன்படுத்துவது மட்டுமே தவறு. போதை ஏற்படாத வகையில் இதைப் பயன்படுத்தினால் தவறில்லை என்ற முடிவுக்கு வரலாம்.

போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

6124 حَدَّثَنِي إِسْحَاقُ حَدَّثَنَا النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ لَهُمَا يَسِّرَا وَلَا تُعَسِّرَا وَبَشِّرَا وَلَا تُنَفِّرَا وَتَطَاوَعَا قَالَ أَبُو مُوسَى يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ يُصْنَعُ فِيهَا شَرَابٌ مِنْ الْعَسَلِ يُقَالُ لَهُ الْبِتْعُ وَشَرَابٌ مِنْ الشَّعِيرِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ رواه البخاري

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனில் “அல்பித்உ’ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் “மிஸ்ர்’ என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி).

நூல்: புகாரி 6124

“அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி).

நூல்: திர்மிதீ 1788, நஸயீ 5513

3725 و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி, நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால், போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள். இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

முஸ்லிம் (3995)

மேற்கண்ட ஹதீஸ்களில் போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காகவே இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றது. ஆல்கஹாலைப் பொறுத்த வரை அதைப் பருகினால் தான் போதை ஏற்படும். எனவே இதைப் பருகுவது கூடாது. ஆனால் இந்த பானம் உடலில் பட்டாலோ ஆடையில் பட்டாலோ அல்லது இதை நுகர்வதாலோ போதை ஏற்படாது.

மேலும் நறுமணத்தை வெளியில் கொண்டு வந்து ஆடையில் சேர்ப்பிக்கும் வேலையைத் தான் வாசணைத் திரவியங்களில் ஆல்கஹால் செய்கின்றது. பாட்டிலிலிருந்து வெளியே வந்தவுடன் இந்த ஆல்கஹால் காற்றில் பட்டு ஆவியாகி விடுகின்றது. ஆடையில் ஒட்டிக் கொண்டிருப்பதில்லை. நறுமணம் மட்டுமே ஆடையில் தங்குகிறது.

எனவே ஆல்கஹால் கலந்த வாசணைத் திரவியங்களைப் பயன்படுத்துவதை மார்க்கம் தடை செய்யவில்லை.