Tamil Bayan Points

ஆன்லைன் திருமணம் அனுமதிக்கப்பட்டதா-?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

Last Updated on April 2, 2020 by

ஆன்லைன் திருமணம் அனுமதிக்கப்பட்டதா-?

நமது சமுதாயத்தில் இப்போது டெலிஃபோன் நிகாஹ், செல்ஃபோன் நிகாஹ், ஸ்கைப் நிகாஹ், வீடியோ கான்ஃபரன்ஸிங் நிகாஹ், ஈமெயில் நிகாஹ், வாட்ஸ் அப் நிகாஹ் போன்ற சொல்லாடல்கள் முஸ்லிம்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதனாலும் பிரச்சனைகள் உருவாகி அது வெடித்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று அதிலும் மோடி அரசாங்கம் மூக்கை நுழைப்பதற்கு அடித்தளமிடுகின்றது.

தலாக்கே ஆன்லைனில் நடைபெறும் போது நிகாஹ் ஆன்லைனில் நடக்கக்கூடாதா? என்ற புரட்சி படைக்க ஒரு கூட்டம் களமிறங்கி விட்டது.  அந்தப் புரட்சிப்படை இந்தத் திருமணத்திற்கு  வைத்த புதுப்பெயர் ஆன்லைன் நிகாஹ்! அது எங்கே அரங்கேறியது?

இதோ சமூக வலைத்தளம் அதற்கான விபரத்தைத் தருகின்றது.

இன்னார் இல்லத் திருமணம், நெல்லையில் (16/06/18) அன்று ஞாயிற்றுக்கிழமை காலையில், “புதுமையான முறையில்”, வெகு விமரிசையாக, நடைபெற்றது. தமிழகத்திலேயே, முதன்முறையாக, “இயங்கு அலை” மூலம், “சவூதி அரேபியா”வில், இருந்தபடியே, மணமகன், இஸ்லாமிய முறைப்படியான, திருமண சடங்குகளை நிறைவேற்றி, மணமகளை தன்னுடைய, அதிகாரப்பூர்வ  மனைவியாக, ஏற்றுக்கொண்டார்.

திருநெல்வேலி “ஜாமியா மசூதி” தலைமை இமாம்.மவ்லானா.மவ்லவி. அல்ஹாபில். அல்ஹாஜ். றி.வி. அப்துல் காதிர் ஆலீம், இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். “சவூதி அரேபியா” நாட்டில், பெரிய நிறுவனம் ஒன்றில், முக்கிய உயர் பொறுப்பில், இருந்து வரும், மணமகனுக்கு, “விடுப்பு” கிடைக்காத காரணத்தினால்  திருமணத்திற்கு வர இயலவில்லை.

அன்று ஞாயிற்றுக்கிழமை, “ஜெய மங்கள சுப முகூர்த்த  நாள்” என்பதால், “இருவீட்டார்கள்” சம்மதத்தின் பெயரிலேயே, திட்டமிட்ட தேதியில், அதாவது, இன்று, இந்தத் திருமணம், இனிதே நடந்தேறியது!- என மண வீட்டார்கள் உற்சாகம் பொங்கக் கூறினார்கள். புதுமையான முறையில், வெகு விமரிசையாக… என்ற புகழாரத்துடன் தொடங்குகின்ற இந்தப் புதுமை, புரட்சித்  திருமணத்தை நடத்தியவர்கள் மத்ஹபை பின்பற்றக் கூடியவர்கள்.

மத்ஹப் இமாம்கள் தங்கள் காலத்தில் இப்படியொரு நவீன தொலைத்தொடர்பு சாதனங்களைக் கற்பனையிலும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள்.  அதற்குரிய சாத்தியம் அந்தக் காலத்தில் அறவே கிடையாது. அதனால் இப்படிப்பட்ட நிகாஹ் கூடுமென்று எந்த இமாம்,  எந்த நூலில்  கூறியிருக்கின்றார்?  எந்த வசனம், எந்த ஹதீஸ்  அடிப்படையில் அவர் இந்தச் சட்டத்தை எடுத்திருக்கின்றார் என்று தெரிவித்தால் நாமும் தெரிந்து கொள்ளலாம்.

அப்படி அவர்கள் மத்ஹபு நூல்களிலிருந்து ஆன்லைன் நிகாஹ் தொடர்பான சட்டத்தைத் தெரிவிக்கவில்லை என்றால் இவர்கள் பின்பற்றுவது மத்ஹபல்ல!  மனோ இச்சை தான் என்று தெளிவாக நாம் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு நாம் கூறுவதற்குக் காரணம் இவர்கள் மத்ஹபுகள் என்ற போர்வையில் மத்ஹபுகள் கூட சொல்லாதவற்றைத் தான் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் பதிவு செய்வதற்காக வேண்டித் தான்.  இப்போது  இந்த ஆன்லைன் நிகாஹ் செல்லுமா? என்று மார்க்க அடிப்படையில் பார்ப்போம்.

திருமணத்தின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. எனினும் அவையனைத்தும் பலவீனமானவையாக உள்ளன. ஆயினும் கொடுக்கல் வாங்கலின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு குர்ஆன் கூறுகிறது.

கடன் கொடுக்கும் போது இரண்டு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் 2:282வது வசனம் கூறுகிறது.

அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் 4:6 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

மரண சாசனம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இறைவன் கூறுகிறான்.

(திருக்குர்ஆன் 5:106)

இதை அடிப்படையாகக் கொண்டு திருமணத்திற்கும் சாட்சிகள் அவசியம் என்பதை அறியலாம்.

திருமணம் செய்த பின் ஒரு தரப்பினர் பிறகு மறுத்து விடக் கூடும் என்பதாலும், விபச்சாரத்தில் ஈடுபடுவோர் மாட்டிக் கொள்ளும் போது தாங்கள் கணவன் மனைவியர் என்று கூறித் தப்பித்து விடாமல் இருப்பதற்காகவும் ஏனைய கொடுக்கல் வாங்கலின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்வது போலவே திருமணத்திலும் குறைந்தது இரு சாட்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

நாளை விவகாரம் ஏற்பட்டால் உள்ளதை உள்ளபடி சொல்வதற்கே சாட்சிகள் தேவைப்படுகின்றனர். சடங்குக்காக சாட்சிகள் ஏற்படுத்தப்படவில்லை.

உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டுமானால் திருமணத்தின் முக்கியமான பேச்சுவார்த்தைகள், கொடுக்கல் வாங்கல் அனைத்தும் அவர் பார்வையில் நடக்க வேண்டும். அவர் தான் சாட்சியாக இருக்கத் தக்கவர்.

மணப் பெண்ணின் சம்மதம் பெறப்பட்டதும், மஹர் கொடுக்கப்பட்டதும், எவ்வளவு மஹர் என்பதும் அவருக்குத் தெரிய வேண்டும். இந்த விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில் திருமணத்திற்கு வந்திருக்கும் இரண்டு நபர்களை சாட்சிகளாக ஆக்குவது அர்த்தமற்றதாகும்.

எண்பதுகளில் திட்டச்சேரியைச் சார்ந்த மறைந்த ஓர்  ஆலிம் மலேசியாவில் பணி புரிந்து கொண்டிருக்கும் போது அங்கிருந்து   தொலைபேசி வாயிலாக ஒரு பெண்ணைத் திருமணம் முடித்தார்.  இதற்குக் காரணம் முஸ்லிம் சமுதாயத்தில் சில மார்க்க அறிஞர்கள் அவ்வாறு திருமணம் செய்வதைச் சரி காண்கின்றனர்.

இரண்டு சாட்சிகள் முன்னிலையில் தொலைபேசியில் பேசி  திருமணம் செய்தேன் என்று தெரிவித்தால் சாட்சிகளின் நிபந்தனையைப் பூர்த்தி செய்து விட்டதாக அவர்கள் நினைக்கின்றனர்.

அதுபோல் வீடியோ கான்பரன்சிங் மூலம் இரண்டு சாட்சிகளை வைத்துத் திருமணம் செய்தால் அது செல்லும் என்று  சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். வீடியோ மூலம் ஒருவன்  திருமணம் செய்வதையும் அதற்கு இரண்டு பேர் சாட்சிகளாக இருப்பதையும் இங்கிருந்து கொண்டே பார்க்க முடிகிறது; எனவே இது செல்லும் என்று அவர்கள் கூறுகின்றனர். இது தவறாகும். ஏனெனில், இதை முழுமையாக அவர்கள் ஆய்வு செய்யவில்லை.

ஒரு திரையில், திருமணம் செய்பவரையும், அதற்குச் சாட்சியான இருவரையும் தான் நாம் பார்க்கிறோம். அவர்கள் எந்தப் பின்னணியில் இருக்கிறார்கள்? திரையில் தென்படாத வகையில் யாரேனும் மிரட்டுவதால் அவ்வாறு சொல்கிறார்களா? சுயநினைவுடன் அதைச் சொல்கிறார்களா? அல்லது கிராபிக்ஸ் மூலம் அதில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? அது நேரடி ஒளிபரப்பா? அல்லது பதிவு செய்யப்பட்டதை ஒளிபரப்புகிறார்களா? என்பது போன்ற பல சந்தேகங்கள் இதில் இருப்பதால்  இந்த நிகாஹ் செல்லத்தக்கதல்ல.

திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம். ஒப்பந்தம் செய்யும் மணமகன் புத்தி சுவாதீனத்துடன் இருக்கின்றாரா? அல்லது போதையுடன் இருக்கின்றாரா? என்பதெல்லாம் திரையில் அறிய முடியாது. சாட்சி சொல்பவர்களும் இந்த அடிப்படையில் தான் இருக்க வேண்டும்.

எவ்வித நிர்ப்பந்தமுமின்றி நேரிடையான இரு சாட்சிகளுக்கு முன்னால் தான் திருமணம் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால்அது  திருமணம் ஆகாது.

இரு குடும்பத்துக்கும் நெருக்கமானவன் அல்லது இரு குடும்பங்களைப் பற்றி தெரிந்தவர்கள் தான் இதற்கு சாட்சியாளர்களாக இருக்க முடியும். மற்றவர்கள் சாட்சியாளர்களாக இருக்க முடியாது.

இதில் இருந்து தபால் மூலமோ, எஸ்.எம்.எஸ். மூலமோ, மின்னஞ்சல் மூலமோ, வீடியோ கான்பரன்சிங் மூலமோ, வாட்ஸ் அப் மூலமோ திருமணம் செய்வது அல்லாஹ்வின் சட்டத்தைக் கேலிக்குரியதாக்குவதாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்!

(அல்குர்ஆன்:2:231)

ஒரு மகனுக்கு மட்டும் சொத்தைக் கொடுத்து மற்ற பிள்ளைகளுக்குக் கொடுக்காமல் இருந்த நபித்தோழர் ஒருவர், இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சாட்சியாக்கிய போது, நான் அநியாயத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து விட்டார்கள். (பார்க்க : புகாரி 2650)

ஓர் ஆண் மார்க்கத்தின் நெறியைப் பேணாமல்  திருமணம் முடிக்கும் போது அதற்கு சாட்சியாக இருப்பதும் இது போன்றது தான். இந்த அடிப்படையில் மேற்கண்ட நவீன சாதனங்கள் மூலம் நடத்தப்படும் திருமணம் செல்லாததாகும்.

அவசியம் என்ன? அவசரம் என்ன?

இங்கு நாம் இன்னொரு கேள்வியை கேட்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.  சவூதியில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைக்கு விடுப்பு இல்லை! அதனால் அவசர, அவசரமாக இந்தத் திருமணம் என்கின்றார்கள். அதற்கு இப்போது அவசரம் என்ன? அவசியம் என்ன? விடுப்பு கிடைக்கும் போது வந்து திருமணம் நடத்தினால் குடி மூழ்கிப் போய் விடுமா? என்று கேட்டால் இதோ  அதற்கான பதில்:

“ஜெய மங்கள சுப முகூர்த்த  நாள்”என்பதால் “இருவீட்டார்கள்” சம்மதத்தின் பெயரிலேயே, திட்டமிட்ட தேதியில், அதாவது, இன்று இந்தத் திருமணம் இனிதே நடந்தேறியது- என மண வீட்டார்கள் உற்சாகம் பொங்க, கூறினார்கள்.

இதுதான் அதற்குரிய பதில்! அதாவது நல்ல நாள், கெட்ட நாள் என்று  இவர்கள் சகுனம் பார்த்திருக்கின்றார்கள். ஜெய மங்கள சுப முகூர்த்த நாளாம். அந்த நாளை விட்டு திருமணம் தாண்டிப் போய் விடக்கூடாது. அதனால் இந்த ஆன்லைன் அவசரத் திருமணம். நல்ல நாள், கெட்ட நாள் என்று முடிவு செய்வதன் மூலம் இவர்கள் அல்லாஹ்வைத் திட்டுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான். ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகின்றான். நானே காலம் (படைத்தவன்) என் கையிலேயே அதிகாரம் உள்ளது, நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்:புகாரி 4826

அடுத்து இவர்கள் அல்லாஹ்வின் விதியின் மீது நம்பிக்கை கொள்வதற்குப் பதிலாக சோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். அதனால் தான் இப்படி ஒரு திருமணத்தை நடத்தி முடித்திருக்கின்றார்கள்.

ஒருவர் சோதிடனிடம் சென்று எதைப் பற்றியாவது கேட்டால் அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: சஃபிய்யா (ரலி)

நூல்: முஸ்லிம் எண்: 4488

ஒரு முஸ்லிம் இந்த ஹதீஸின் எச்சரிக்கையைப் பயந்து ஒரு போதும் சோதிடம் பார்க்க மாட்டான். ஆனால் இந்தத் திருமணத்தில் சோதிடம் பார்த்திருக்கின்றார்கள்.  இதன்படி இந்தத் திருமணம் இஸ்லாமியத் திருமணம் கிடையாது.

பிறமத சமுதாய மக்கள் தான் நாள் நட்சத்திரம் பார்ப்பார்கள். அவர்கள் நம்பிக்கைப்படி காலை 10:40 க்கு நல்ல நேரம் முடிகின்றது என்றால் அதற்கு முன்பு தங்கள் காரியங்களை முடித்து விடுவார்கள்.

ஒரு பெண்ணுக்குக் காலை 11 மணிக்குத் தான் குழந்தை சுகப்பிரசவமாகப் பிறக்கும் என்றாலும் அதற்காகக் காத்திருக்க மாட்டார்கள். 10:40க்கு  முன்பே அறுவை சிகிச்சை செய்து அந்தக் குழந்தையை வெளியே எடுத்து விடுவார்கள். அதே நம்பிக்கை தான் இந்தத் திருமணத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆன்லைன் நிகாஹ் என்று முத்திரை குத்தப்பட்டு, ஒரு பிறமதக் கலாச்சார அடிப்படையிலான திருமணம் இஸ்லாமியத் திருமணமாக ஆக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தத் திருமணத்தில் மார்க்கமும் கிடையாது, மத்ஹபும் கிடையாது. மனோ இச்சை தான் இவர்கள் மார்க்கமாக இருக்கின்றது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.