Tamil Bayan Points

ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டு பெண்களுக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

ஆண்களுக்கு தங்கம் தடுக்கப்பட்டு பெண்களுக்கு ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்?

இதற்குக் காரணம் எதையும் இஸ்லாம் கூறவில்லை.

அதிக விலை உள்ள உலோகம் என்பதற்காக தங்கம் தடை செய்யப்படவில்லை. அதை விட அதிக விலை உடைய பிளாட்டினம் போன்றவைகள் ஆண்களுக்குத் தடுக்கப்படவில்லை.

தங்கம் இரும்பை விடக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டாலும் அப்போதும் அது ஆண்களுக்கு தடுக்கப்பட்டதாகவே இருக்கும்.

இது குறித்து முஸ்லிம் அறிஞர்கள் சிலர் ஆய்வு செய்து ஒரு உண்மையை வெளிப்படுத்தி உள்ளனர்.

தங்கம் எனும் உலோகம் வெப்பத்தை விரைவில் வெளியேற்றக் கூடியது என்று சோதனைகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. உலகில் உள்ள உலோகங்களை நெருப்பில் பழுக்கக் காய்ச்சி தண்ணீரில் போட்டு உடனே வெளியே எடுத்தால் அதில் உள்ள வெப்பம் முழுமையாக வெளியேறாமல் அது சிறிது நேரம் சூடாகவே இருக்கும். அதிக நேரம் சென்ற பிறகு தான் அதன் வெப்பம் தணியும்.

ஆனால் தங்கத்தைச் சூடேற்றி அதைத் தண்ணீரில் போட்டு உடனே வெளியே எடுத்தால் அதன் வெப்பம் முழுமையாக வெளியேறி இருக்கும்.

இந்தச் சோதனை அடிப்படையில் ஆண்கள் தங்கம் அணியும் போது அவர்களின் உடலில் உள்ள வெப்பம் வேகமாக வெளியேற்றப்படும். ஓரளவு சூடாக இருக்க வேண்டிய ஆணகளின் உடல் சூட்டை அதிகம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தாம்பத்தியத்தையும் பாதிக்கும்.

ஆனால் பெண்களின் உடல் ஆண்களின் உடலை விடக் குளிர்ச்சியாக இருந்தால் தான் அவர்களிடம் அழகு மிளிரும். அவர்கள் தங்கம் அணிவதால் அது அவர்களுக்கு நன்மை பயக்கும்.

மேற்கண்ட சோதனை அனுபவ அடிப்படையில் செய்யப்பட்ட சோதனையாகும்.

அறிவியல் ரீதியாக இது குறித்து சோதனை எதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. அப்படி செய்யப்பட்டால் இன்னும் பல உண்மைகள் வெளி வரக்கூடும்.

அலங்கரித்து மினுக்குவதில் தங்கத்துக்கு நிகராக வேறு உலோகம் இல்லை. ஆண்களுக்கு இந்தத் தன்மை தேவை இல்லை. அவர்கள் தளுக்கி மினுக்கிக் கொண்டு திரிவது ஆண்மைக்கு ஏற்றதாக இல்லை. இது அல்லாத இன்னும் பல காரணங்கள் இருக்கலாம். காலப்போக்கில் அவை உலகுக்குத் தெரிய வரலாம்