Tamil Bayan Points

18) அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

நூல்கள்: பிறை ஓர் விளக்கம்

Last Updated on October 30, 2022 by

அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் பரிசீலிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக் களமாகவும்,சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.

அல்குர்ஆன் 6:96

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

அல்குர்ஆன் 10:5

தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும், சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும், பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்.

அல்குர்ஆன் 14:33

அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.

அல்குர்ஆன் 21:33

இரவும் அவர்களுக்கு ஓரு சான்று. அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள். சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது. சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.

அல்குர்ஆன் 36:36, 37, 38, 39, 40

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.

அல்குர்ஆன் 55:5

பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்” எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:189

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்!

அல்குர்ஆன் 9.36

இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தினோம்.

அல்குர்ஆன் 17:12

வானத்தில் நட்சத்திரங்களை ஏற்படுத்தி, அதில் விளக்கையும், ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்.

அல்குர்ஆன் 25:61

என்பன போன்ற வசனங்களை ஆதாரமாகக் காட்டுகின்றனர். அல்லாஹ் சந்திரனுக்குப் பல படித்தரங்களை ஏற்படுத்தியுள்ளான். அந்தப் படித்தரங்கள் நாட்களை அறிந்து கொள்வதற்குத் தானே? வானியல் முடிவுப்படி நாட்களைக் கணித்தால் தானே அது காலம் காட்டியாக இருக்க முடியும்? சந்திரன் காலம் காட்டி என்று அல்லாஹ் கூறுவது உண்மை தான். இதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை.

2007 முதல் தான் சந்திரன் காலத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளதா? அல்லது சந்திரனை அல்லாஹ் படைத்தது முதல் காலம் காட்டுகிறதா? என்று சிந்தித்தாலே இந்த வாதத்தின் பலவீனத்தை உணர முடியும்.

அல்லாஹ் சந்திரனை எப்போது படைத்தானோ அப்போது முதல் அது காலம் காட்டியாகத் தான் இருக்கிறது. அந்த காலம் முதல் அதைப் பார்த்துத் தான் மக்கள் நாட்களைத் தீர்மானித்துக் கொண்டனர். ஹஜ் எப்போது கடமையாக்கப்பட்டதோ அப்போது முதல் ஹஜ்ஜின் காலத்தைக் காட்டக் கூடியதாகவும் பிறை அமைந்துள்ளது.

என்னவோ இவ்வளவு நூற்றாண்டுகளாக பிறை காலம் காட்டாமல் இருந்தது போலவும் 2007ல் வானியல் அறிவு வளர்ந்த பின் தான் அது காலத்தைக் காட்டக் கூடியதாக ஆகி விட்டது போலவும் இவர்கள் நினைக்கிறார்கள் போலும்.

வருங்காலத்தில் காலம் காட்டியாக இருந்தால் மட்டும் போதாது எந்தக் காலத்தில் இது கூறப்பட்டதோ அந்தக் காலத்தில் நிச்சயம் காலம் காட்டியாக அமைந்திருப்பது அவசியம். இல்லையென்றால் அன்றைக்கு இந்த வசனம் அருளப்பட்ட போது உண்மையில்லாத செய்தியை அது கூறியதாக ஆகி விடும்.

பிறை எவ்வாறு காலம் காட்டியாக இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கி விட்டனர். (இதை முன்னர் நாம் விளக்கியுள்ளோம்) அவர்கள் காலத்தில் அது எப்படி காலம் காட்டியாக இருந்ததோ அப்படியே இன்றளவும் இனி சந்திரன் உள்ளளவும் அது காலம் காட்டியாக இருக்கும்.

இன்னும் சொல்வதானால் அன்றைக்கு எப்படி சந்திரன் சிறிதாகத் தோன்றி பின்னர் படிப்படியாக வளர்ந்து பின்னர் தேய ஆரம்பித்ததைக் கண்ணால் பார்த்து காலத்தைக் கணித்துக் கொண்டார்களோ அதே போல் இன்றைக்கும் கண்களால் பார்த்துத் தான் காலத்தை அறிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட வசனங்கள்அனைத்தும் இதைத் தான் கூறுகின்றன.