Tamil Bayan Points

05) அறிவிக்கப்படுபவரை கவனித்து ஹதீஸின் வகைககள்

முக்கிய குறிப்புகள்: ஹதீஸ் கலை

Last Updated on March 7, 2022 by Trichy Farook

யாரைப் பற்றி அறிவிக்கப்படுகிறது என்பதைக் கவனித்து பிரிக்கப்படும் ஹதீஸின் வகைகள்

1. குத்ஸீ

2. மர்ஃபூஃ

3. மவ்கூஃப்

4. மக்தூஃ

  •  அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் குத்ஸீ என்றும்
  •  நபிகள் நாயகம் தொடர்புடைய ஹதீஸ்கள் மர்ஃபூவு என்றும்
  •  நபித்தோழர்கள் தொடர்புடைய செய்திகள் மவ்கூஃப் என்றும்
  •  தாபியீன்கள் தொடர்புடைய செய்திகள் மக்தூவு என்றும் கூறப்படும்.

 

குத்ஸீ

அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களுக்கு ஹதீஸ் குத்ஸீ எனப்படும்.

உதாரணம்:

1038- حَدَّثَنَا إِسْمَاعِيلُ ، حَدَّثَنِي مَالِكٌ ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ
صَلَّى لَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صَلاَةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلَةِ فَلَمَّا انْصَرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَقْبَلَ عَلَى النَّاسِ ، فَقَالَ : هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي كَافِرٌ بِالْكَوْكَبِ وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي مُؤْمِنٌ بِالْكَوْكَبِ.

நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி, “உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் பின் காலித்(ரலி), நூல்: புகாரி 1038.

இந்த ஹதீஸில், “அல்லாஹ் கூறுகிறான்” என்று அல்லாஹ்வுடன் இணைத்து நபிகள் நாயகம் அவர்கள் கூறுவதால் இது ஹதீஸ் குத்ஸீ எனப்படுகிறது. குத்தூஸ் (பரிசுத்தமானவன்) என்பது அல்லாஹ்வின் பெயராகும். அத்தகைய அல்லாஹ்வுடன் இந்த செய்தி இணைக்கப் படுவதால் “ஹதீஸ் குத்ஸீ” என்று சொல்லப்படுகிறது.

நபிகள் நாயகம் சொல்லும் அனைத்து ஹதீஸ்களும் அல்லாஹ்விடமிருந்து பெறப்பட்ட இறைச்செய்திகள் தான். இறைச்செய்திகளுக்குள் எந்த பாகுபாடும் இல்லை. எனவே ஹதீஸ் குத்ஸிக்கு என்று தனிச்சிறப்புகள் ஏதும் கிடையாது.

மர்ஃபூவு

நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் பற்றி அறிவிக்கப்படும் ஹதீஸ்களுக்கு மர்ஃபூவு எனப்படும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் யாரும் விடுபட்டிருக்கலாம், விடுபடாமலும் இருக்கலாம். எனவே மர்ஃபூவு தரத்தில் அமைந்த ஹதீஸ்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

உதாரணம்:

9- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ قَالَ : حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ قَالَ : حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ.

“இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).

நூல்: புகாரி 9

இந்த ஹதீஸ் நபி (ஸல்) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று நபியவர்கள் சொன்னதாக, செய்ததாக, அங்கீகரித்ததாக வரும் செய்திகள் அனைத்தும் “மர்ஃபூவு” என்று ஹதீஸ் கலையில் சொல்லப்படும்.

மவ்கூஃப்

நபித்தோழர்களின் சொல், செயல், அங்கீகாரம் என நபித்தோழர்கள் தொடர்பாக மட்டும் அறிவிக்கப்படும் செய்திகள் மவ்கூஃப் என்று சொல்லப்படும். இதில் நபிகள் நாயகம் பற்றி எந்த தகவலும் குறிப்பிடப்படாது. அறிவிப்பாளர் வரிசை நபித்தோழருடன் நிறுத்தப்படுவதால் மவ்கூஃப் (நிறுத்தப்பட்டது) என்று பெயரிடப்பட்டுள்ளது.

உதாரணம்:

1022 – وَقَالَ لَنَا أَبُو نُعَيْمٍ عَنْ زُهَيْرٍ ، عَنْ أَبِي إِسْحَاقَ
خَرَجَ عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ الأَنْصَارِيُّ وَخَرَجَ مَعَهُ الْبَرَاءُ بْنُ عَازِبٍ وَزَيْدُ بْنُ أَرْقَمَ رضى الله عنهم فَاسْتَسْقَى فَقَامَ بِهِمْ عَلَى رِجْلَيْهِ عَلَى غَيْرِ مِنْبَرٍ فَاسْتَغْفَرَ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ يَجْهَرُ بِالْقِرَاءَةِ وَلَمْ يُؤَذِّنْ وَلَمْ يُقِمْ.

அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கூஃபாவின் ஆளுநராயிருந்த) அப்துல்லாஹ் பின் யஸீத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (மழைத் தொழுகை நடத்தத் தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுடன் பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி) ஆகியோரும் சென்றனர். அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தார்கள். சொற்பொழிவுமேடை (மிம்பர்) ஏதும் இல்லாமல் தரையில் நின்றுகொண்டே பாவமன்னிப்புக் கோரினார்கள். பிறகு சப்தமிட்டு ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பாங்கும் சொல்லவில்லை; இகாமத்தும் சொல்லவில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி), நூல்: புகாரி 1022

இது அப்துல்லாஹ் பின் யஸீத் எனும் நபித்தோழரின் செயலாக இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் சம்பந்தப்படவில்லை.

இதுபோன்று நபித்தோழர்கள் சொன்னதாக, செய்ததாக வரும் செய்திகளுக்கு “மவ்கூஃப்” என்று பெயரிடப்படும்.

மக்தூஃ

தாபீயீன்களின் சொல், செயல் பற்றி அறிவிக்கப்படும் செய்திகளுக்கு மக்தூஃ என்று சொல்லப்படும். இந்தச் செய்தியில் நபிகள் நாயகமோ, நபித்தோழர்களோ சம்பந்தப்பட மாட்டார்கள்.

உதாரணம்:

25696- حَدَّثَنَا وَكِيعٌ ، قَالَ : حدَّثَنَا شَرِيكٌ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، قَالَ :
كَانَ سَيْف مَسْرُوقٌ مُحَلًّى.

“மஸ்ருக் என்பவருடைய வாள் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்”.

நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா (25575)

இந்தச் செய்தி மஸ்ருக் என்ற தாபியை பற்றி அறிவிக்கப்பட்ட செய்தியாகும். இதுபோன்று தாபியைப் பற்றிய செய்திகளுக்கு “மக்தூஃ” என்று சொல்லப்படும்.

அறிவிப்பாளர் வரிசையில் விடுபடும் அறிவிப்பாளர்களைக் கவனித்து

மறுக்கப்படும் செய்திகளின் வகைகள்

1. முர்ஸல்

2. முஃளல்

3. முன்கதிஃ

4. முஅல்லக்

முர்ஸல்

அறிவிப்பாளர் வரிசையில் எல்லா அறிவிப்பாளர்களும் இடம் பெற்று நபித்தோழர்கள் மட்டும் விடுபட்டிருக்கும் ஹதீஸ்களுக்கு முர்ஸல் எனப்படும். நபித்தோழரை விட்டு விட்டு ஒரு தாபியி, நபிகள் நாயகம் சொன்னதாக இதில் அறிவிப்பார்.

உதாரணம்:

 

“நபி (ஸல்) அவர்கள் தனது வலது கண்ணில் மூன்று தடவையும், இடது கண்ணில் மூன்று தடவையும் சுர்மா இடுவார்கள்”. அறிவிப்பவர்: இம்ரான் பின் அபீ அனஸ். நூல்: தபகாத் 1455.

இந்தச் செய்தியில் அறிவிப்பாளர் வரிசையில் நபித்தோழரைக் குறிப்பிடாமல், “இம்ரான் பின் அபீ அனஸ்” என்ற தாபியியே, நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டது போன்று அறிவிக்கின்றார்.

இது போன்ற செய்திகள் “முர்ஸல்” என்று குறிப்பிடப்படும்.

முஃளல்

அறிவிப்பாளர் வரிசையில் தொடர்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் விடுபட்டிருந்தால் அந்தச் செய்திக்கு முஃளல் எனப்படும்.

உதாரணம்:

“அடிமைக்கு நல்ல முறையில் ஆடையும் உணவும் வழங்க வேண்டும். அவர்களுக்கு இயலாத காரியத்தில் அவர்களை ஈடுப்படுத்தக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஅத்தா 1769

இந்தச் செய்தியில், தொடர்ந்து இரண்டு அறிவிப்பாளர்கள் விடுப்பட்டிருக்கிறார்கள்.

இமாம் மாலிக் அவர்களின் மாணவரான மாலிக் பின் அனஸ் அவர்கள், தனக்கு மேலுள்ள இரண்டு அறிவிப்பாளர்களை விட்டு விட்டு தானே நேரடியாக அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்டது போன்று அறிவித்திருப்பதால் இது “முஃளல்” என்று குறிப்பிடப்படுகிறது.

 

முன்கதிஃ

முன்கதிஃ என்றால் தொடர்பு அறுந்தது என்று பொருள். அறிவிப்பாளர் வரிசையில் தாபியியோ அல்லது தாபியிக்குக் கீழுள்ள ஏதோ ஒரு அறிவிப்பாளரோ விடுப்பட்டிருக்கும் செய்திக்கு முன்கதிஃ என்று சொல்லப்படும்.

உதாரணம்:

“நபி (ஸல்) அவர்கள் தொழுகையை தக்பீரைக் கொண்டும், அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் ஓதுவதைக் கொண்டும் ஆரம்பிப்பார்கள். ருகூஃவு செய்தால் தலையை உயர்த்தி விடாமலும், தாழ்த்தி விடாமலும் நடுத்தரமாக வைப்பார்கள். ருகூவிலிருந்து நிமர்ந்தால் சீராக நிற்கும் வரை ஸஜதா செய்ய மாட்டார்கள். ஸஜ்தாவிலிருந்து எழுந்தால் சீராக அமரும் வரை மீண்டும் ஸஜ்தா செய்ய மாட்டார்கள். தனது இடது காலை விரித்து வலது காலை நட்டி வைத்து ஒவ்வொரு இரண்டாவது ரக்அத்திலும் அத்தஹிய்யாத்தை கூறுவார்கள். இன்னும் ஷைத்தானின் அமர்வை விட்டும், ஒரு மனிதன் குடங்கையை கால்நடை விரிப்பதைப் போன்று (ஸஜ்தாவில்) விரிப்பதை விட்டும் தடுத்தார்கள். மேலும், தொழுகையை ஸலாமைக் கொண்டு முடிப்பார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 768

இந்தச் செய்தியை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

அவர்களிடமிருந்து அபுல் ஜவ்ஸா என்பவர் அறிவித்ததாக அறிவிப்பாளர் தொடரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால், அவர் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை.

அவருக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் மத்தியில் மற்றொரு அறிவிப்பாளர் விடுப்பட்டிருக்கிறார்.

எனவே, இந்தச் செய்தி “முன்கதிஃ” என்று சொல்லப்படும்.

 

முஅல்லக்

ஒரு நூலாசிரியர் முழு அறிவிப்பாளர் தொடரையோ, அல்லது சிலரையோ விட்டு விட்டு நபிகள் நாயகம் அவர்களின் சொல் அல்லது செயல் தொடர்புடைய அறிவிக்கும் செய்திகளுக்கு முஅல்லக் எனப்படும்.

உதாரணம்:

“நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்”. என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி

இந்தச் செய்தியை பத்தொன்பதாவது பாடத்தில் (634வது ஹதீஸின் கீழ்) புகாரி இமாம் கொண்டு வந்துள்ளார்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அனைத்தையும் போக்கிவிட்டு ஆயிஷா (ரலி) அவர்களை மட்டும் குறிப்பிடுவதால் இது “முஅல்லக்” எனப்படும்.

(இந்த ஹதீஸின் முழுமையான அறிவிப்பாளர் தொடர் “ஸஹீஹ் முஸ்லிமில்” இடம்பெறுகிறது.)

இன்னும், இந்த வகை ஹதீஸ்களில் “முதல்லஸ்” என்று ஒரு வகையுள்ளது. இதைப் பற்றி 40ஆம் பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது.

 

முதல்லஸ்

(இருட்டடிப்பு செய்யப்பட்டது)

அறிவிப்பாளர் தொடரில் உள்ள குறையை மறைத்து விட்டு, வெளிப்படையில் அழகாகக் காட்டுவதற்கு “தத்லீஸ் (இருட்டடிப்பு செய்தல்)” என்று சொல்லப்படும்.

இவ்வாறு, எந்தச் செய்தியில் செய்யப்பட்டதோ அதற்கு “முதல்லஸ்” என்றும், தத்லீஸ் செய்தவருக்கு “முதல்லிஸ் (இருட்டடிப்பு செய்தவர்)” என்றும் சொல்லப்படும்.

ஒருவர், தனது ஆசிரியரிடம் கேட்காததை அறிவிப்பதும், அறிவிப்பாளர் தொடரில் உள்ள பலவீனமானவரைப் போக்கிவிட்டு ஸஹீஹான அறிவிப்பாளர் தொடரைப் போன்று வெளிப்படையில் காட்டுவதும், தனது ஆசிரியரின் பிரபலமான பெயரை மறைத்துவிட்டு பிரபலமில்லாத பெயரைச் சொல்வதும் தத்லீஸ் (இருட்டடிப்பு) ஆகும்.

ஒரு அறிவிப்பாளர் மீது முதல்லிஸ் (இருட்டடிப்பு) செய்பவர் என்ற குறை கூறப்பட்டிருந்தால் அவர், ஹதீஸ் அறிவிக்கும் போது கூறப்படும் தெளிவான வார்த்தைகளான “ஹத்தஸனா, அன்பஅனா, சமிஃத்து” போன்ற சொற்களைக் கூறினால் அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ளலாம்.

அதேசமயம், மூடலான வார்த்தைகளான “அன், கால” போன்ற சொற்களை கூறினால் அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி என்ற துஆவை ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: அபூதாவூத் 4431

இந்தச் செய்தியின் அறிவிப்பாளரில் ஒருவராக இடம் பெறும் இப்னு ஜுரைஜ் என்பவர் தத்லீஸ் (இருட்டடிப்பு) செய்பவர் என்று விமர்சிக்கப்பட்டவர். இந்த செய்தியில் அவர் “அன்” என்ற மூடலான வார்த்தையைக் கூறியிருப்பதால் இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

 

முஅன்அன்

ஹதீஸை அறிவிக்கும் போது ”அன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது “முஅன்அன்” எனப்படும்.

”அன் அபீஹுரைரா” ”அன் ஆயிஷா” (அபூஹுரைரா வழியாக – ஆயிஷா வழியாக) என்பது போல் குறிப்பிடும் ஹதீஸ்கள் முஅன்அன் எனப்படும்.

”நமக்குச் சொன்னார்” ”நமக்கு அறிவித்தார்” ”நம்மிடம் தெரிவித்தார்” ”நான் காதால் அவரிடம் செவியுற்றேன்” என்பது போல் அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தால் அப்படியே அதை ஏற்க வேண்டும்.

ஆனால் முஅன்அன் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்கள் பரிசீலனைக்குப் பிறகே ஏற்கப்படும்.

தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக அவர் இல்லாதிருந்து இவ்வாறு பயன்படுத்தினால் அதனால் ஹதீஸின் தரம் பாதிக்காது.

”அவர் வழியாக” ”அவர் மூலம்” என்றெல்லாம் இவர் பயன்படுத்துவதற்கும், நமக்கு அறிவித்தார் என்பதற்கும் இவரைப் பொறுத்தவரை வித்தியாசம் இல்லை.

அவர் தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக இருந்து இவ்வாறு அவர் அறிவித்தால். இவர் நேரடியாகச் செவியுற்றது வேறு வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

நிரூபிக்கப்பட்டிருந்தால் ஏற்கலாம். அவ்வாறு நிரூபிக்கப்படாவிட்டால் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அதாவது, முஅன்அன் என்று கூறப்பட்டவுடன் அதை ஏற்கவோ மறுக்கவோ கூடாது. மாறாக ஆய்வு செய்த பின்னர் தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

 

மேற்கூறப்பட்ட சட்டங்களில்

ஏற்றுக் கொள்ளத் தக்கவையும்

ஏற்றுக் கொள்ளத் தகாதவையும்

1. கரீப்

2. அஜீஸ்

3. மஷ்ஹுர்

4. குதுஸீ

5. மர்ஃபூவு – ஆகிய வகைகளில் அமைந்த ஹதீஸ்களை அறிவிப்பாளர் தொடரும், கருத்தும் சரியாக அமைந்து இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

1. முர்ஸல்

2. முஃளல்

3. முன்கதிஃ

4. முஅல்லக் – ஆகிய வகைகளைச் சார்ந்த செய்திகளில் அறிவிப்பாளர்கள் விடுபடுவதாலும், விடுபட்டவர்கள் யாரென்றும் அவர்களின் நம்பகத்தன்மை என்னவென்றும் தெரியாததாலும் இந்த வகைகளைச் சார்ந்த செய்திகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

“முதல்லஸ்’ என்ற வகையில் இருட்டடிப்பு செய்யக்கூடிய அறிவிப்பாளர் தெளிவான வார்த்தைகளை (ஹத்தஸனா, அன்பஅனா, ஸமிஃத்து என்று) கூறினால் ஏற்றுக் கொள்ளலாம். மூடலான வார்த்தைகளை (அன், கால) கூறினால் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

1. மவ்கூஃப்,

2. மக்தூஃ போன்ற வகைகளைப் பொறுத்த வரையில் அவை ஹதீஸ்களே கிடையாது.

ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள்தான் ஹதீஸ் என்று சொல்லப்படும்.

ஸஹாபாக்கள், தாபியீன்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் அஸர் என்றுதான் சொல்லப்படும்.

நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டவைதான் இறைச்செய்தி – வஹியாகும். அதைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.

அதைத் தவிர்த்து, ஸஹாபாக்கள், தாபியீன்கள் போன்ற மனிதர்களுடைய கூற்றுகளை நாம் மார்க்கமாகப் பின்பற்றினால் அது வழிகேடாகும்.

எனவே மவ்கூஃப், மக்தூஃ போன்ற செய்திகளை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஏனெனில் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்:

“உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கி பின்பற்றராதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்” (அல்குர்ஆன் 7:3)

 

முஸல்ஸல்

(சங்கிலித் தொடர்)

நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஒரு ஹதீஸை ஓர் அறிவிப்பாளர் அறிவிக்கும் போது நபியவர்களிடம் ஏற்பட்ட செயல்ரீதியிலான வெளிப்பாடுகளையும், அங்க அசைவுகளையும் செய்து காட்டி தனக்கு அடுத்த அறிவிப்பாளருக்கு அறிவிப்பார்.

இந்தச் செயல்முறை கடைசி அறிவிப்பாளர் வரை தொடர்வதற்குப் பெயர் முஸல்ஸல் என்று சொல்லப்படும்.

உதாரணம்:

நபி (ஸல்) அவர்கள் என்னுடைய கையை பிடித்து, முஆதே! அல்லாஹ்வின் மீதானையாக “உன்னை நான் விரும்புகிறேன், அல்லாஹ்வின் மீதானையாக “உன்னை நான் விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். பிறகு, முஆதே! “அல்லாஹும்ம அஇன்னி அலா திக்ரிக்க வஷுக்ரிக்க வஹுஸ்னி இபாத்தத்திக்க” (பொருள்: இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என்று ஒவ்வொரு தொழுகைக்கு பின்னாலும் கூறாமல் இருக்காதே என உனக்கு நான் உபதேசிக்கின்றேன் என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல்(ரலி). நூல்: அபூதாவூத் 1524.

இந்த ஹதீஸில் “உன்னை நான் விரும்புகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி)க்கு சொன்னதைப் போன்றே, அறிவிப்பாளர்கள் அனைவரும் தங்களது மாணவர்களுக்கு அறிவிக்கும் போது “உன்னை நான் விரும்புகிறேன்” என்று சொல்லி அறிவித்திருக்கின்றார்கள்.

இது ஹதீஸ்களை அறிவிப்பதில் தனிச் சிறப்புமிக்க ஒரு முறையாகும்.

 

மகனிடமிருந்து தந்தை அறிவித்த ஹதீஸ்கள்

பொதுவாக, தந்தையிடமிருந்து மகன் அறிவிப்பது தான் வழக்கம். ஆனால் மகனிடமிருந்து தந்தை அறிவிக்கும் நிகழ்வுகளும் அரிதாக நடந்துள்ளன. அவ்வகை ஹதீஸ்களையும் அறிஞர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர். அறிவிப்பாளர் வரிசையில் குளறுபடி உள்ளதோ என்று கருதி இவ்வகை ஹதீஸ்களைப் புறக்கணித்து விடக்கூடாது என்பதே இதற்கு காரணமாகும்.

உதாரணம்:

“நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை திருமணம் செய்துக் கொண்டதற்காக கோதுமை மாவையும் பேரீச்சம் பழங்களையும் வலிமா விருந்தாக கொடுத்தார்கள்”.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதீ 1015.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் “வாயில் பின் தாவூத்” என்பவர் இடம்பெறுகிறார். இவர் தாபி ஆவார். இவர் தனது மகனான பக்ர் பின் வாயில் என்பவரிடமிருந்து அறிவிக்கின்றார். இவர் தபஉத் தாபி ஆவார்.

நபிகள் நாயகம் அவர்களின் ஹதீஸ்களை காப்பதில் அறிஞர்கள் எடுத்துக் கொண்ட அதிகபட்ச பேணுதலையும், ஆய்வுக் கண்ணோட்டத்தையும் இது வெளிப்படுத்துகிறது.

 

சிறியவர்களிடமிருந்து பெரியவர்கள் அறிவித்த ஹதீஸ்கள்

ஓர் அறிவிப்பாளர் தன்னை விட வயதில், தரத்தில், கல்வியில் தனக்கு கீழுள்ள அறிவிப்பாளரிமிருந்து அறிவித்த செய்திகளை ஹதீஸ்கலை மேதைகள் அடையாளம் கண்டு வைத்துள்ளனர். இதற்கும் காரணம், அறிவிப்பாளர் வரிசை தவறுதலாக இடம்பெற்றுள்ளதோ என்று கருதி இவ்வகை ஹதீஸ்களைப் புறக்கணித்து விடக்கூடாது என்பதாகும்.

உதாரணம்:

“கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் “முத்அத்துன்னிஸா’ (கால வரம்பிட்டு செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்று தடைவிதித்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி). நூல்: நஸாயீ 3314

இந்த செய்தியில் யஹ்யா பின் சயீத் எனும் அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். இவர் தாபி ஆவார். இவர் தபஉத் தாபியும் தனது மாணவருமான மாலிக் பின் அனஸ் என்பவர் வழியாக இந்தச் செய்தியை அறிவிக்கின்றார். இவ்வாறு ஆசிரியர் மாணவரிடமிருந்தும், பெரியவர்கள் சிறியவர்களிடமிருந்தும் அறிவித்துள்ள ஹதீஸ்கள் பல உள்ளன.

 

நன்கு பிரபலமான  அப்துல்லாக்கள்

“அப்துல்லாஹ்” என்ற பெயரில் ஹதீஸ்களை அறிவிக்கின்ற நபித்தோழர்கள் அதிகமாக உள்ளனர்.  அவர்களை அரபியில் பன்மையாக “அபாதிலா’ என்று ஹதீஸ் துறையில் குறிப்பிடுவர். (அபாதிலாஹ் என்றால் அப்துல்லாஹ்கள் என்று பொருள்) அப்துல்லாஹ் என்ற பெயர் கொண்ட ஏழு ஸஹாபாக்கள்….

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்,

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்,

அப்துல்லாஹ் இப்னு உமர்,

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்,

அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்,

அப்துல்லாஹ் இப்னு சஅத் இப்னு அபீஸராஹ்,

அப்துல்லாஹ் இப்னு ஜாஃபர் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் .