Tamil Bayan Points

அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறி

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on May 29, 2019 by

அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறி

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் 9 கறுப்பினத்தவர்களை படுகொலை செய்த வெள்ளை இனத்தைச் சேர்ந்த மேலாதிக்க வெறியர் ஒருவருக்கு கடந்த வாரம் மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிறவெறி எந்த அளவிற்கு ஊறிப்போயுள்ளது என்பதற்கு இந்த சம்பவம் தக்க சான்று பகர்கின்றது.

9 கறுப்பின மக்களை காட்டு மிராண்டித்தனமாக சுட்டுக் கொலை செய்த டைலன் ரூஃ ப் என்ற இந்த நபர் மீது வெறுப்பு உணர்வினால் புரிந்த குற்றங்கள் உள்பட 33 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. தனது குற்றத்துக்கு வருத்தம் எதனையும் தெரிவிக்காத டைலன் ரூஃ ப், இது குறித்து , ”இதைச் செய்ய வேண்டும் என்று நான் உணர்ந்தேன். மேலும், தற்போதும் இதைச் செய்ய வேண்டும் என்றே நான் கருதுகிறேன்” என்று தீர்ப்பு கூறிய நீதிபதிகளிடம் தெரிவித்திருப்பது நிறவெறியின் உச்சம்.

வெள்ளையாகப் பிறப்பதும், கருப்பாகப் பிறப்பதும் இறைவனின் படைப்பில் சரிசமமானதுதான்; நிறத்தை வைத்து யாரும் சிறந்தவரோ, தாழ்ந்தவரோ இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும். ஒருவர் தான் எந்த நிறத்தில் பிறக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்ய முடியுமா? அவரால் முடிவு செய்ய முடியாத விஷயத்தை வைத்து அவரை இழிவுபடுத்துவதோ, அவரே தனக்குத்தானே பெருமைப்பட்டுக் கொள்ளுவதோ எவ்விதத்தில் நியாயம்?

இந்த நிறவெறி அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் இன்னும் கடுமையான முறையில் தலைவிரித்தாடி வருகின்றது. இதற்கு முன்னதாக கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் சாலையைக் கடந்து சென்றதற்காக சில மாதங்களுக்கு முன்னதாக வெள்ளை நிறத்தைச் சேர்ந்த ஒருவரால் அநியாயமாக நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அதுபோல கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களது கையையும், காலையும் கட்டி வைத்து நாய்களை ஏவி அவர்களைக் கடித்துக் குதற வைத்த கொடுமைகளும் இதே மேற்கத்திய நாடுகளில் அரங்கேறியது.

அதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் 9 கறுப்பினத்தவர்களைக் கொலை செய்துவிட்டு இன்னும் கொல்ல வேண்டும் என்று தான் விரும்புவதாக கொலைகாரன் தெரிவித்திருக்கின்றான். அதேபோல அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் கருப்பினத்தைச் சேர்ந்த பெண் உணவு பரிமாறிய போது நிறவெறியை வெளிப்படுத்தியுள்ள வெள்ளை இனத்தவர்களின் செயல் தற்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. கருப்பினத்தைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் டிப்ஸ் தர முடியாது என்று அவர்கள் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர். உதாரணத்திற்கு ஒரு சில சம்பவங்களை இங்கே சுட்டிக்காட்டியுள்ளோம்;

இது அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகள் முழுவதும் உள்ள நிலை; நிறவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனச் சட்டங்கள் போடப்பட்டுள்ள இந்த நிலையிலும் கூட கறுப்பின மக்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கின்றன. அதுவும் இந்த கம்ப்யூட்டர் காலத்திலும்கூட இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன; எவ்வளவோ கடுமையான சட்டங்களைப் போட்டும் கூட இந்த நிறவெறியை ஒழிக்க முடியவில்லை; ஆனால்

இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிறவெறியை ஒழித்துக்கட்டியது; அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்கள் நிறவெறிக்கு எதிரான பிரகடனத்தை தனது இ றுதிப்  பேருரையின் போது செய்தார்கள்; மனிதர்கள் அனைவரும் ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்தவர்கள்தான்; நம் அனைவரையும் படைத்தது ஒரே ஒரு இறைவன்தான்; அவனது படைப்பில் நாம் அனைவரும் அடிமைகள்; இதில் மொழி; இன; நிற பேதமில்லை என்பதுதான் இஸ்லாத்தின் தாரக மந்திரம்.

அதனால்தான் கறுப்பின அடிமையாக இருந்த பிலால் (ரலி) அவர்களை பாங்கு சொல்லும் உயர்ந்த பொறுப்புக்கு அண்ணலார் நியமித்தார்கள்; நாங்கள் உயர்ந்த குலம் என்று சொல்லி பெருமையடித்தவர்களெல்ல £ம் இஸ்லாத்தை ஏற்ற பிறகு அந்தக் கறுப்பின அடிமையோடு தோளோடு தோள் சேர்த்து ஒரே வரிசையில் நின்று நிறவெறியை ஒழித்துக் கட்டினார்கள்;

 இஸ்லாத்தில் நிறவெறிக்கு இடமில்லை

அதனால்தான் நிறவெறியால் பாதிக்கப்பட்டு அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட கருப்பின சகோதர சகோதரிகள் கோடான கோடிப் பேர் இஸ்லாத்தைத் தழுவி வந்தனர்; இன்னும் தழுவி வந்து கொண்டுள்ளனர்.

மனிதனை மனிதனாகப் பார்க்கும் மார்க்கம் இஸ்லாம்

அதனால்தான் நிறத்தால்; மொழியால்; இனத்தால்; பேதமில்லை; உயர்வு தாழ்வு என்பதெல்லாம் நல்ல செயலைச் செய்யக்கூடியவர்கள் யார் என்பதை வைத்துத்தான் இறைவன் முடிவெடுப்பானே தவிர வெள்ளைத்தோலை வைத்தோ, கருப்புத்தோலை வைத்தோ இறைவன் முடிவெடுக்க மாட்டான் என்று நபிகளார் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார்கள். இந்த நம்பிக்கை ஆழப்பதிய வைத்துப் பாருங்கள்; நிற வெறி அடியோடு அழிந்து போகும். அதுதான் இஸ்லாம் நிகழ்த்திக்காட்டிய அற்புதம்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (அல்குர் ஆன் 49:13)

“மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன்தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!” (நூல்: அஹ்மத் 22391)

Source : unarvu (20/01/17 )