Tamil Bayan Points

அபூலஹபின் தண்டனைக் குறைப்பு என்ற செய்தி நபியவர்கள் கூறியதா?

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on December 7, 2022 by Trichy Farook

அபூலஹபின் தண்டனைக் குறைப்பு என்ற செய்தி நபியவர்கள் கூறியதா?

அது மீலாத் விழாவுக்கு ஆதாரமாகுமா?

ரபீஉள் அவ்வல் மாதத்தில் இஸ்லாமிய வரலாற்றுடன் தொடர்பான மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

  1. நபி (ஸல்) அவர்களின் பிறப்பு
  2. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹிஜ்ரத் பயணம்
  3. நபியவர்களின் மரணம்

இவற்றில் ஏனைய இரு நிகழ்வுகளையும் விட்டுவிட்டு முதல் நிகழ்வாகிய நபியவர்களின் பிறந்த தின நிகழ்வை மாத்திரம் உலகளாவிய மட்டத்தில் விமர்சையாக் கொண்டாடப்படுவதை கவனிக்கலாம்.

கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் என்ற பெயரில் நபி ஈஸா (அலை) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது போல் முஸ்லிம்கள் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய பிறந்த தினத்தை மீலாத் என்ற பெயரில் கொண்டாடுகிறார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது. 

நபியவர்களோ, நபித்தோழர்களோ நபியவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடியதற்கான எவ்விதமான சான்றுகளும் கிடைக்காத பட்சத்தில், ஒரு சிலர் நபியவர்கள் பிறந்ததையொட்டி அவர்களது பெரிய தந்தை அபூலஹப் மகிழ்ந்ததாகவும், அதன் பலனாக அவருக்குக்குத் தண்டனை குறைக்கப்பட்டதாகவும் புஹாரியில் இடம்பெற்றுள்ள ஒரு செய்தியில் பார்க்கலாம்.

இச்செய்தி நபியவர்களின் கூற்றா?

இது வருடாவருடம் மீலாத் விழா கொண்டாட ஆதாரமாகுமா? என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலில் அபூலஹப், நபியவர்கள் பிறந்த செய்தி கேட்டவுடனே செய்த ஒரு செயலை, வருடாவருடம் மேடை போட்டு மீலாத்விழா கொண்டாட ஆதாரமாகக் கொள்ளலாமா ? 

அபூலஹப் அதன் நினைவாக வருடாவருடம் நபியவர்கள் பிறந்த தினத்தன்று ஒவ்வோர் அடிமையை விடுவித்திருந்தால் அதனை ஆதாரமாக எடுக்கலாமா? கூடாதா? என்று ஓரளவுக்கு சிந்திக்கலாம்.

அதுவும் அவர் இறை மறுப்பாளராக வாழ்ந்து, சபிக்கப்பட்டு, இறை மறுப்பாளராகவே மரணித்தவர் எனும் போது அதுவும் தவிடுபொடியாகின்றது.  பொதுவாக எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் தனது உடன்பிறப்பில் ஒருவருக்கு குழந்தை பிறந்ததென்றால் மகிழ்வது இயற்கைதான்.

அதற்காக அவர் செய்த ஒரு நற்பணியை இஸ்லாத்தில் நன்மை ஈட்டித்தரும் செயலென்று ஒன்றை நிருவ ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இறை மறுப்பாளர்களுக்கு தண்டனை குறைக்கப்படுமா?

பொதுவாக மறுப்பாளர்களுக்கு ஒரு போதும் தண்டனை குறைக்கப்பட மாட்டாது என பல அல்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் இடம்பெற்றுள்ளன.

2:162 خٰلِدِيْنَ فِيْهَا ۚ لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُوْنَ

அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்“.

(அல்குர்ஆன் : 2 : 162.)

35:36 وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ نَارُ جَهَنَّمَ‌ۚ لَا يُقْضٰى عَلَيْهِمْ فَيَمُوْتُوْا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِّنْ عَذَابِهَا

“(நம்மை) மறுத்தோருக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக்குமாறு முடிவு செய்யப்பட மாட்டாது. (அப்படியாயின்) அவர்கள் மரணித்து விடுவார்கள். அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது“

(அல்குர்ஆன் : 35: 36) 

அவர்கள் செய்த நற்செயல்களுக்கும் அல்லாஹ்விடம் எவ்வித மதிப்புமில்லை என்பதை பின்வரும் ஆதாரங்களின் மூலம் அறியலாம். 

25:23 وَقَدِمْنَاۤ اِلٰى مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ فَجَعَلْنٰهُ هَبَآءً مَّنْثُوْرًا‏

“அவர்கள் செய்து வந்த செயல்களைக் கவனித்து அவற்றைப் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவோம்“.

(அல்குர்ஆன் : 25: 23.) 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

நான், “அல்லாஹ்வின் தூதரே! இப்னு ஜுத்ஆன் அறியாமைக் காலத்தில் உறவுகளைப் பேணி நடப்பவராகவும் ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தாரே! இவை அவருக்கு (மறுமை நாளில்) பயனளிக்குமா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், அவருக்குப் பயனளிக்காது; அவர் ஒரு நாள் கூட “இறைவா! விசாரணை நாளில் என் பாவத்தை மன்னித்தருள்வாயாக!’ என்று கேட்டதேயில்லை” என்று பதிலளித்தார்கள்.

நூல் : முஸ்லிம்-365 (214)

அபூலஹபின் தண்டனைக் குறைப்பு நபியின் கூற்றா?

அபூலஹபுக்கு தண்டனை குறைக்கப்படுகின்றது என்ற செய்தி புகாரியில் (5101) இல் பதிவாகியுள்ளது.

அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) கூறினார்:

ஸுவைபா, அபூ லஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி(ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூ லஹப் இறந்தபோது அவரின் குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார்.

அபூ லஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூ லஹபிடம், ‘(மரணத்திற்குப் பிறகு) நி எதிர்கொண்டது என்ன?’ என்று அவர் கேட்டார்.

உங்களைவிட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது” என்று கூறினார்.

மேற்கண்ட செய்தி உர்வா அவர்களின் கூற்றுதான். நபி (ஸல்) அவர்கள் கூறியதல்ல.

இந்தச் செய்தி பல காரணங்களால் ஏற்கத்தக்கதல்ல.

கனவு என்பது மார்க்கமாகாது. கனவில் காட்டப்படுவது போல் நடக்கும் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை. அபூலஹபின் குடும்பத்தினரில் முஸ்லிம்களும் இருந்தனர் முஸ்லிம் அல்லாதவரும் இருந்தனர். கனவில் கண்டவர் யார் என்பது தெரியவில்லை. கனவு கண்டவர் யார் என்பது கூறப்படவில்லை.

இதைக் கூறுபவர் உர்வா என்பவர். இவர் அந்தக் காலகட்டத்தில் பிறக்காதவர்; நபித்தோழர் அல்லர்.

கனவு என்பது காண்பவருக்கு மட்டுமே தெரிந்ததாகும். அவர் சொல்லாமல் யாரும் அறிய முடியாது. அவ்வாறிருக்க உர்வாவுக்கு இது எப்படி தெரிந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கனவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் பெறவில்லை.

திருக்குர்ஆன் 111 வது அத்தியாயம் அவனது கைகளும் அவனும் நாசமாகட்டும் என்று திருக்குர்ஆன் கூறும் போது அந்தக் கையில் ஒரு பகுதியாகத் திகழும் ஒரு விரல் மட்டும் நாசமாகாது என்பது அல்லாஹ்வின் கருத்துடன் மோதும்.

காபிர்களாக இறந்துவிட்ட யாருக்கும் தண்டனையிலிருந்து சலுகையோ, அல்லது தண்டனைக் குறைப்போ அறவே கிடையாது” என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

2:161 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ اُولٰٓٮِٕكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللّٰهِ وَالْمَلٰٓٮِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَۙ

2:162 خٰلِدِيْنَ فِيْهَا ۚ لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُوْنَ‏

(ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது. அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 2:161,162.)

அபுல் காஸிம் அஸ்ஸுஹைலி என்பவர் தனது “அர்ரௌழுல் உனுப்” எனும் நூலில் 5/122 அறிவிப்பாளர் வரிசையின்றி :

கனவு கண்டவர் அப்பாஸ் (ரலி) என்பதாகவும், அபூ லஹப் மரணித்து ஒரு வருடத்திற்குப் பின் இக்கனவு கண்டதாகவும், ஒவ்வொரு திங்கட்கிழமையும் நபியவர்கள் பிறந்ததையொட்டி ஸுவைபாவை விடுவித்ததால் தனது விரலிடையால் நீர் புகட்டப்படுவதாகவும் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் நாம் மேற்கூறிய காஃபிர்களின் நற்செயல்கள் பயனளிக்காது என்பது பற்றிய அல்குர்ஆன் வசனங்கள், நபிமொழிக்கு முரணாக இருக்கின்றது.

அறிவிப்பாளர் வரிசையே இல்லாத, அல்லது ஒரு தாபிஈயின் முர்ஸல் வகைச் செய்திக்காக இறைவசனங்களையும், ஸஹீஹான நபிமொழிகளையும் புறக்கணிக்கலாமா என்பதை சிந்திக்க வேண்டும். 

ஆக, இச்சம்பவத்தில் மீலாத்விழாவுக்கு ஆதாரமில்லை. அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைபெறச் செய்வானாக.