Tamil Bayan Points

அன்னை ஆயிஷா பற்றிய அவதூறு சம்பந்தமாக

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

Last Updated on November 16, 2020 by Trichy Farook

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு பயணம்) புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு செல்வார்கள்.

இவ்வாறே அவர்கள் தாம் மேற் கொண்ட (பனூ முஸ்த-க் என்ற) ஒரு போரின் போது எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட் டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். (இது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பர்தா எனும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். (அப் பயணத்தின் போது) நான் எனது ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்படுவேன். அதில் நான் இருக்கும் நிலையிலேயே (கீழே) இறக்கி வைக்கவும்படுவேன்.

நபி (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து (வெற்றியுடன்) திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கிய போது இரவு வேளையில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள்.

அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்த போது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக் கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன்.

அப்போது (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) ழஃபாரி நகர முத்து மாலையொன்று அறுந்து(விழுந்து)விட்டது. ஆகவே நான் (திரும்பிச் சென்று) எனது மாலையைத் தேடலானேன். அதைத் துழாவிக் கொண்டி ருந்தது, (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்து விட்டது.

எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைத் தூக்கிச் சென்று நான் பயணம் செய்து வந்த ஒட்டகத்தின் மீது வைத்துக்கட்டிவிட்டனர்.

அந்தக் காலக்கட்டத்தில் பெண்கள் மெ-ந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கும் அளவுக்கு அவர்களுக்கு சதைபோட்டிருக்க வில்லை. (அப்போதைய) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். ஆகவே, அந்தச் சிவிகை யைத் தூக்கிய போது அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக வேறு இருந்தேன்.

எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி (அதில் நானிருப்பதாக நினைத்தபடி) நடக்கலாயினர். படை கடந்து சென்ற பிறகு (காணாமற்போன) எனது மாலை கிடைத்து விட்டது. நான் அவர்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்றுவிட்டிருந்தனர்.) அங்கு (அவர்களில்) அழைப்பவரும் இருக்கவில்லை; பதிலளிப்ப வரும் இருக்கவில்லை. நான் (ஏற்கெனவே) தங்கியிருந்த இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க என் கண்ணில் உறக்கம் மே-ட்டுவிட நான் தூங்கிவிட்டேன்.

படை சென்றதற்குப் பின்னால் (படையினர் முகாமிட்ட இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமி அத்தக்வானீ என்பார் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் (தவறவிடப்பட்ட பொருள்களைத் தேடுவதற்காக) வந்து சேர்ந்தார்.

அவர் (அங்கே) தூங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தை (என்னை)ப் பார்த்தார். ஆகவே, என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டு கொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார்.

அவர் என்னை அறிந்து கொண்டு இன்னா-ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்ல விருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே (உறக்கத்தில் விலகியிருந்த) எனது மேலங்கி யால் முகத்தை மறைத்துக் கொண்டேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் இன்னா-ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவி யேற்கவுமில்லை. பிறகு அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக் கொள்வதற்கு ஏதுவாக) அதன் முன்னங் கால்களை (தமது காலால்) மிதித்துக் கொள்ள, நான் அதில் ஏறிக் கொண்டேன். அவர் நானிருந்த ஒட்டகத்தை நடத்திச் செல்லலானார்.

இறுதியில் படையினர் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்ட பின்னர் நாங்கள் அவர்களை வந்தடைந்தோம். இப்போது (எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து போனார்கள். என் மீது அவதூறு(ப் பிரசாரம்) செய்ததில் பெரும் பங்கு எடுத்துக் கொண்டி ருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.

பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து ஒரு மாதகாலம் நான் நோயுற்று விட்டேன்.

மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது.

நான் நோயுறும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இம்முறை நான் நோயுற்றிருந்த போது) அவர்களிடம் காண முடியாமல் போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு எப்படி இருக்கிறாய் என்று கேட்பார்கள். பிறகு திரும்பிச் சென்று விடுவார்கள். அவ்வளவுதான். இது தான் எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைப் பற்றி வெளியே பேசப்பட்டு வந்த) அந்தத் தீய சொல் பற்றி ஒரு சிறிதும் (உடல் நலம் தேறுவதற்கு முன்) எனக்குத் தெரியாது.

நோயிலிருந்து குணமடைந்த பின் நானும் என்னுடன் மிஸ்தஹின் தாயாரும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த மனாஸிஉ (எனப்படும் புறநகர் பகுதியை) நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) சென்று கொண்டிருந்தோம். கழிப்பிடம் நோக்கி வெளியே செல்லும் எங்களது இந்த வழக்கம் முந்தைய அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. அப்போது நாங்கள் எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதைத் தொந்தரவாகக் கருதிவந்தோம்.

நானும் உம்மு மிஸ்தஹும் நடந்தோம். அவர் அபூ ருஹ்ம் (பின் முத்த-ப்) பின் அப்தி மனாஃப் அவர்களின் புதல்வியாவார். அபூபக்ர் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியான (ராயித்தா) பின்த் ஸக்ர் பின் ஆமிர்தான் உம்மு மிஸ்தஹின் தாயாராவார். உம்மு மிஸ்தஹின் புதல்வரே மிஸ்தஹ் பின் உஸாஸா (பின் அப்பாத் பின் முத்த-ப்) ஆவார்.

(இத்தகைய) உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் (இயற்கைத்) தேவைகளை முடித்துக் கொண்டு எனது வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தனது ஆடையில் இடறிக் கொண்டார். உடனே அவர், மிஸ்தஹ் நாசமாகட்டும் என்று (தம் புதல்வரைச் சபித்தவராகக்) கூறினார். நான், மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ருப் போரில் கலந்து கொண்ட ஒரு மனிதரையா ஏசுகின்றீர்கள்? என்று கூறினேன். அதற்கு அவர், அம்மா! அவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா? என்று கேட்டார். என்ன சொன்னார்? என நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை அப்போது அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு எனது நோய் இன்னும் அதிகரித்து விட்டது. நான் எனது வீட்டுக்குத் திரும்பி வந்த போது (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எனக்கு சலாம் சொல்லிவிட்டு, எப்படி இருக்கிறாய்? என்று கேட்டார்கள். அப்போது நான் என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா? என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகின்றதா என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை என் பெற்றோரி டமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக் கொள்ள அப்போது நான் விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். உடனே நான் என் பெற்றோரிடம் வந்து(சேர்ந்)தேன்.

என் தாயாரிடம், அம்மா! மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கி றார்கள்? என்று கேட்டேன். என்தாயார், என் அன்பு மகளே! உன் மீது (இந்த விஷயத்தைப்) பெரிதுபடுத்திக் கொள்ளாதே! அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, தம் கணவரிடம் பிரியத்துக் குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும் என்று கூறினார்.

உடனே நான், சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்.) இப்படியா மக்கள் பேசி விட்டார்கள்! என்று (வியப்புடன்) சொன்னேன். அன்றிரவு காலை வரை நான் அழுதேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்த போதும் அழுதேன்.

(இதற்கிடையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (அதாவது என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தா-ப் அவர்களையும், உஸாமா பின் ஸைத் அவர்களையும் அழைத்தார்கள். அத்தருணத்தில் வஹீ (வேத அறிவிப்பு- தாற்கா-கமாக) நின்றுபோயிருந்தது.

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களோ நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதையும் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் (குடும்பத்தார் மீது) இருந்த பாசத்தில் தாம் அறிந்துள்ளதையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! தங்களுடைய துணைவியாரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை என்று அப்போது உஸாமா சொன்னார்கள்.

அலீ அவர்களோ ளநபி (ஸல்) அவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாகன அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்க ளுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்த வில்லை. ஆயிஷா அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப்பெண் (பரீரா) இடம் கேட்டால், அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள் என்று கூறினார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, பரீராவே! (ஆயிஷாவிடம்) உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது நீ பார்த்திருக்கிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர், தம் வீட்டாரின் குழைத்த மாவை அப்படியே விட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார். (வீட்டிலுள்ள) ஆடுவந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (விபரமும்) வயது(ம்) குறைந்த இளம்பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை என்று பதில் கூறினார்.

அன்றைய தினம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலுக்கு எதிராக உதவி கோரி எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை மேடையில் (மிம்பரில்) இருந்தவாறு முஸ்லிம் மக்களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனுக்கெதிராக எனக்கு உதவிபுரிபவர் யார்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரி டம் நல்லதையே நான் அறிவேன். அவர்கள் (அவதூறு கிளப்பிய நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் வீட்டாருடன் இணைத்து) அவதூறு கூறியுள்ளனர். அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். நான் இருக்கும் போது தான் அவர் என் வீட்டிற்கு வந்திருக்கின்றார். (தனியாக வந்ததில்லை) என்று கூறினார்கள்.

உடனே (பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் அல் அன்சாரி (ரலி) அவர்கள் எழுந்து நின்று, அல்லாஹ்வின் தூதரே! அவனுக்கெதிராகத் தங்களுக்கு நான் உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவனது கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் செய்து முடிக்கிறோம் என்று கூறினார்கள்.

உடனே சஅத் பின் உபாதா எழுந்தார். இவர் கஸ்ரஜ் குலத்தின் தலைவராவார். இவர் அதற்கு முன் நல்ல மனிதராகத் தான் இருந்தார். ஆயினும், குலமாச்சர்யம் அவரை உசுப்பிவிடவே, அவர் சஅத் பின் முஆத் அவர்களைப் பார்த்து, அல்லாஹ்வின் மீதணையாக! தவறாகச் சொல்லிவிட்டீர்! அவனை நீர் கொல்லமாட்டீர். அவனைக் கொல்ல உம்மால் முடியாது என்று கூறினார்.

உடனே உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்றார். இவர் (அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் ஆவார். அவர் சஅத் பின் உபாதா அவர்களிடம் நீர்தாம் தவறாகப் பேசினீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றேதீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். அதனால்தான் நயவஞ்கர்களின் சார்பாக வாதிடுகின்றீர்! என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை மேடைமீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட்டுக் கொள்ளத் தயாராகிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து இறங்கி) அவர்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். பிறகு தாமும் அமைதியாகி விட்டார்கள்.

அன்றைய நாள் முழுவதும் நான் அப்படியே இருந்தேன். என் கண்ணீரும் ஓய வில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகே இருந்தார்கள். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) தூக்கம் என்னைத் தழுவாமலும் கண்ணீர் ஓயாமலும் அழுது விட்டிருந்தேன். என் ஈரல் பிளந்து விடுமோ என்று என் பெற்றோர் எண்ணிக் கொண்டிருந்தனர்.

நான் அழுது கொண்டிருக்க, என்னருகில் என் தாய் தந்தையர் அமர்ந்து கொண்டிருந்த போது, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் (உள்ளே வர) அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள்.

நாங்கள் இவ்வாறு இருக்கையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சலாம் கூறிவிட்டு, அமர்ந்தார்கள். (என்னைப் பற்றி) அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாதகாலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விட மிருந்து தீர்ப்பு எதுவும்) அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே அவர்கள் இருந்து வந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழி கூறி, இறைவனைப் புகழ்ந்து விட்டு, ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்தது. நீ நிரபராதியாக இருந்தால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று (வஹீயின் மூலம்) அறிவித்து விடுவான். (ஒருக்கால்) நீ குற்றமே தும் செய்திருந்தால், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு! ஏனெனில், அடியான் தனது பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால், அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான் என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்த போது எனது கண்ணீர் (முழுவதுமாக) நின்றுபோய்விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை.

அப்போது நான் என் தந்தையார் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்கு பதில் கூறுங்கள்! என்று சொன்னேன். அதற்கு என் தந்தையார், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். பிறகு நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பதில் கூறுங்கள்! என்று சொன்னேன். அதற்கு என் தாயார், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். அதற்கு நான், நானோ வயது குறைந்த இளம் பெண். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவள். இந்நிலையில் (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக் கொண்ட) இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனங்களில் பதிந்து போய் அதை உண்மை என்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதை அல்லாஹ்வின் மீதாணையாக நான் அறிவேன். ஆகவே, உங்களிடம் நான் குற்றமற்றவள் என்று கூறினால், -நான் குற்றமற்றவள்என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- அதை நீங்கள் நம்பப் போவதில்லை. நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால், -நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- நான் சொல்வதை அப்படியே (உண்மை என்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! (எனக்கும்) உங்களுக்கும் நபி யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை (நபி யாகூப் -அலை) அவர்களையே உவமானமாகக் காண்கிறேன். (அதாவது:) (இதைச்) சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் நான் பாதுகாப்புக் கோரவேண்டும் (12:18) என்று கூறினேன். பிறகு (வேறு பக்கமாகத்) திரும்பிப்படுத்துக் கொண்டேன். அப்போது நான் குற்றமற்றவள் என்பதையும் மேலும், அல்லாஹ் நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான் என்பதையும் நன்கறிவேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! ஓதப்படுகின்ற வஹீயை (வேத அறிவிப்பை) என் விஷயத்தில் அல்லாஹ் அருள்வான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் ஓதப்படுகின்ற ஒன்றைச் சொல்கின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என அறிவிக்கும் ஒரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உறக்கத்தில் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (எங்கள் வீட்டில் அமர்ந்திருந்த இடத்திலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்திருக்கவுமில்லை. வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது (குர்ஆன் வசனங்கள்) அருளப்படத் தொடங்கிவிட்டன. உடனே அவர்களுக்கு (வேத அறிவிப்பு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரம நிலை அவர்களைப் பற்றிக் கொண்டது. அது கடுங்குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து வேர்வைத் துளிகள் சிறு முத்துகளைப் போல் வழியத் தொடங்கி விட்டன. அவர்களின் மீது அருளப்பட்ட இறைவசனத்தின் பாரத்தினால்தான் (அவர்களுக்கு வியர்வை அரும்பி வழியுமளவுக்கு) இந்தச் சிரமநிலை ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு விலகியவுடன் (மகிழ்ச்சியுடன்) சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை ஆயிஷா! மாண்பும் மகத்துவமுமிக்க அல்லாஹ் உன்னை குற்றமற்றவள் என்று அறிவித்து விட்டான் என்பதாகவே இருந்தது.

உடனே என் தாயார் அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்! என்று (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்ல மாட்டேன். மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்வையே புகழ்(ந்து, அவனுக்கே நன்றி செலுத்து)வேன் என்று சொன்னேன்.

(அப்போது) அல்லாஹ், அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம் என்று தொடங்கும் (24:11-20) பத்து வசனங்களை அருளியிருந்தான். என் குற்ற மற்ற நிலை தொடர்பாக அல்லாஹ் இதை அருளிய போது (என் தந்தை) அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து மிஸ்தஹ் (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன் என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதாலும், அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டுவந்தார்கள். அப்போது அல்லாஹ் உங்களில் செல்வம் மற்றும் தாயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்க மாட் டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணையுடை யோனுமாய் இருக்கின்றான் எனும் (24:22ஆவது) வசனத்தை அருளினான்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்தமாட்டேன் என்றும் சொன்னார்கள்.

(குர்ஆனில் எனது கற்பொழுக்கம் குறித்த வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம்முடைய இன்னொரு துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் விசாரித்திருந்தார்கள். ஸைனபே! நீ (ஆயிஷா குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்? அல்லது பார்த்திருக்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே! என் காதையும் என் கண்ணையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்துக் கொள்கிறேன். ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன் என்று கூறினார்கள். ஸைனப் அவர்கள்தாம் நபியவர்களின் துணைவியரில் எனக்கு ளஅழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும்ன போட்டியாக இருந்தவர். ஆயினும், அல்லாஹ் அவரை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். ஆனால், ஸைனபுக்காக அவருடைய சகோதரி ஹம்னா (என்னுடன்) மோதிக் கொள்ள லானார். (என் விஷயத்தில்) அவதூறு பேசி அழிந்துபோனவர்களுடன் அவரும் அழிந்து போனார்.

புகாரி-4750