Tamil Bayan Points

அனுமதிக்கப்பட்ட பொய்கள்

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

Last Updated on February 8, 2020 by

அனுமதிக்கப்பட்ட பொய்கள்

நபியவர்கள் இரவுத் தொழுகைக்காக எழுந்திருக்கும் போது, ஆயிஷா (ரலி) அவர்கள் கண்விழித்தால் அவருடன் பேசிக் கொண்டிருப்பார்கள் என ஹதீஸ்களில் நாம் காண முடிகிறது. எனவே இது போன்று பரஸ்பரம் பேசிக் கொண்டிருப்பதும் கணவன் மனைவிக்குள்ள கடமை என்று விளங்குகிறது.

வெறுமனே தாம்பத்யம் மட்டுமே இல்லறக் கடமை கிடையாது. மற்ற விஷயங்களிலும் மனைவிக்கு மகிழ்ச்சி அளிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையடைந்த பின்) உட்கார்ந்து (இரவுத் தொழுகை) தொழுதிருக்கிறார்கள். அப்போது உட்கார்ந்தபடியே ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை நிலையிலேயே ஓதிவிட்டு ருகூஉச் செய்வார்கள். பின்னர் சஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் பார்ப்பார்கள். அப்போது நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கிக் கொண்டிருந்தால் அவர்களும் படுத்துக் கொள்வார்கள்.

நூல்: புகாரி 1119, 1162

எனவே மனைவியோடு பேசுவதற்காகவும் கேலி கிண்டல் செய்வதற்கும் கணவன்மார்கள் நேரம் ஒதுக்க வேண்டும். கலகலப்பாக இருக்க வேண்டும். அவர்களது சிறுபிள்ளைத் தனங்களை ரசித்து, அதற்கு முட்டுக் கட்டை இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும். அவர்களது விளையாட்டுத் தனங்களை ஊக்குவிக்கும் விதத்தில் கணவன்மார்கள் நடந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் மார்க்கத்திற்கு எதிராக நன்மையைப் பாதிக்கும் வகையில் இருந்தால் மட்டும் நாம் கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்த வேண்டும். மற்றபடி அவர்களது உரிமைகளுக்கும் ஆசைகளுக்கும் குறுக்கே நிற்கக்கூடாது.

அதேபோன்று திருமண நிகழ்ச்சி போன்றவற்றுக்குச் செல்ல பெண்கள் மிகவும் ஆசைப்படுபவர்களாகவே இருப்பார்கள்.

நபியவர்கள் காலத்திலும் ஸஹாபியப் பெண்கள், திருமண வீடுகளுக்குப் போய்வருகிற வழக்கம் இருந்தது. இதை நபியவர்கள் தடுக்கவில்லை.

ஏனெனில் திருமணம் என்றால், இன்று இருப்பதைப் போன்ற சூழ்நிலை கிடையாது. எல்லா திருமணமும் நபிவழியில் தான் நடந்திருக்கும். அதாவது வரதட்சணை வாங்கியிருக்க மாட்டார்கள். மார்க்கத்திற்குப் புறம்பான பித்அத்துக்கள் இருந்திருக்காது. அன்றைய திருமணத்தின் எல்லா வழிமுறையும் நபிவழியில் சுன்னத்தான முறையில்தான் இருக்கும்.

ஆனால் நம் சமூகத்தைப் பொறுத்தளவில், நாம் பார்த்துப் பார்த்து ஆய்வு செய்துவிட்டுத்தான் கலந்து கொள்ள வேண்டிய அவல நிலை உள்ளது. எந்தக் கல்யாணம் நபிவழியில் சுன்னத்தை மீறாமல், கலந்துகொள்ளும் தகுதியில் இருக்கிறதோ அதுபோன்ற கல்யாணத்திற்கு இன்றும் போகலாம்.

(அன்சாரிப்) பெண்களும், குழந்தைகளும் திரும்பி வருவதை நபி (ஸல்) அவர்கள்  பார்த்தார்கள்.- அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: இதை எனக்கு அறிவித்தவர் “ஒரு மண விழாவிலிருந்து வருவதை’’ என்று சொன்னதாக நினைக்கிறேன். உடனே நபி (ஸல்) அவர்கள் நேராக எழுந்து நின்று கொண்டு, “இறைவா! (நீயே சாட்சி! அன்சாரிகளே!) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்’’ என்று சொன்னார்கள். இந்த வாக்கியத்தை அவர்கள் மூன்று முறை சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 3785,5180

இந்த ஹதீஸ் அடிப்படையில், நமது பெண்கள் மார்க்கம் அனுமதித்த திருமணத்திற்குச் செல்ல ஆசைப்பட்டால் தடுக்கக் கூடாது.

கணவன் மனைவியாகிய இருவரும் சந்தோஷமாக இருப்பதுதான் முக்கியம். அதனால் முக்கியமான சட்டத்தைக் கூட, தளர்த்தி அனுமதி வழங்குகிறார்கள் நபியவர்கள்.

பொதுவாக இஸ்லாம் மார்க்கத்தில் பொய் சொல்வது பாவம். அதுதான் எல்லா பாவங்களுக்கும் தலையானது என்றும் கூட நபியவர்கள் சொன்னார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்காகப் பொய் சொல்லிக் கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்குகிறார்கள்.

கணவன் மனைவியை சந்தோஷப்படுத்த, மனைவியிடம் தேவைக்குத் தகுந்த மாதிரி பொய் சொல்லிக் கொள்ளலாம். அதேபோன்று மனைவியும் கணவனைச் சந்தோஷப்படுத்தும் அளவுக்கு உள்ள விஷயங்களில் பொய் சொல்லிக் கொள்ளலாம்.

பொய் என்றால் பொத்தாம் பொதுவாக, தவறாகப் புரிந்து கொள்ளவும் கூடாது. வாக்குறுதி கொடுத்து ஏமாற்றும் விதமாகப் பொய் சொல்வது கூடாது. மோசடி செய்வதற்காகவெல்லாம் பொய் சொல்ல முடியாது. ஊதாரித்தனமாக இருப்பதற்காக மனைவியின் கழுத்தில் கிடக்கும் சங்கிலியை வாங்கிவிட்டுச் செல்வதற்காக பொய் சொல்லக் கூடாது.

இது மோசடி, ஏமாற்றுதல் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

கணவன் மனைவிக்கிடையே யாரும் யாரையும் எதிலும் ஏமாற்றாமல், மோசடிக்குள்ளாக்காமல், பாசத்தை நேசத்தை வளர்த்துக் கொள்ளும் வகையில் உள்ள பொய்களைச் சொல்லிக் கொள்ள அனுமதியுள்ளது.

உதாரணத்திற்கு, ஒரு கணவன், மனைவியைப் பார்த்து, உன்னிடம் உள்ள குணம் மாதிரி உலகத்தில் யாருக்குமே வாய்க்காது என்று சொல்லிக் கொள்ளலாம். உலகத்திலேயே நீதான் பேரழகி என்று சொல்லிக் கொள்ளலாம்.

அதேபோன்று மனைவி, கஞ்சனாக இருக்கிற கணவனைப் பார்த்து, உங்களை மாதிரி வள்ளலை நான் பார்த்ததே இல்லை என்று புகழ்வதில், கொஞ்சுவதில் பொய் சொல்லிக் கொள்ளலாம்.

இப்படியெல்லாம் சொல்லும் போது மனைவி தன் கணவனைப் பற்றி அகமகிழ்ந்து கொள்வாள். இதனால் அவள் கணவனின் உறவில் மானசீகமாக நடந்து கொள்வாள். இல்லறக் கடமைகளை ஈடுபாட்டுடன் செய்வாள்.

இன்னும் சொல்வதாக இருந்தால், சின்னச் சின்ன பாராட்டுக்களெல்லாம் பெண்களுக்கு பெரிதாகத் தெரியும். சாப்பாட்டில் கூடக் குறைவு இருந்தாலும் உன் கைப்பக்குவம் யாருக்கு வரும்? என்று பாராட்டிவிட்டால் அவர்கள் அதிகம் மகிழ்ச்சி அடைவார்கள்.

இதுபோன்ற பொய்களினால் யாருக்கும் தொந்தரவுகள் இல்லை. யாருடைய உரிமையும் உடமையும் மானமும் சேதப்படாது. மோசடியோ ஏமாற்றுதலோ இதுபோன்ற பொய்களில் இருக்காது. இப்படி மூன்று இடங்களில் பொய் சொல்வதை மார்க்கம் அனுமதிப்பதாக நபியவர்கள் கூறுகிறார்கள்.

ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதலாம் முஹாஜிர்களில் ஒருவரான என் தாயார் உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்’’ என்று கூறுவதை நான் கேட்டேன்.

இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!

  1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).
  2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவ தற்காகச் சொல்லப்படும் பொய்.
  3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.

நூல்: முஸ்லிம் 5079

இந்தச் செய்தியை முக்கியப்படுத்திச் சொல்லக் காரணம், குடும்ப உறவில் கணவன் மனைவி உறவு எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மனிதனின் சந்தோஷத்தைப் பெற்றுத் தருகிற காரியம், தடுக்கப்பட்டதாக இருந்தாலும் அனுமதியைத் தருகிறான். ஏனெனில் பொய் என்பது இறைவன் வெறுக்கின்ற பாவம். அல்லாஹ்வின் சாபத்தினை பெற்றுத் தரும் காரியம்.

இப்படியெல்லாம் இறைவன் விட்டுக் கொடுக்கிறான் எனில், கணவன் மனைவியாக வாழ்கிறவர்கள் எப்படியெல்லாம் தங்களது வாழ்வில் அனுசரித்து இணக்கமாகப் போக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டு நடந்திட வேண்டும்.

நல்லது ஏற்படுமாயின் பொய் சொல்வது தவறில்லை. இதை சரியாகப் புரிந்து கொண்டால், மாமியார் மருமகள் பஞ்சாயத்தே அடிபட்டுப் போய்விடும். அப்படி சமாளிக்கத் தெரியாமல் பலபேர் வெகுளித்தனமாக நடப்பதினால் தான் குடும்பத்தில் பல பிரச்சனை மேலும் பெரிதாகி விடுகின்றது.

நமது தாயாருக்கும் நமது மனைவிக்கும் இடையில் மாட்டிக் கொண்டு நாம் தான் பெரும்பாடு படுகிறோம். அப்படியெனில் நம் தாயாரிடம் ஒரு பொய், நமது மனைவியிடம் ஒரு பொய் சொல்லி விட்டால் குடும்பம் உருப்படியாக சந்தோஷமாகச் சென்றுவிடும்.

சண்டையில் அம்மாவிடம், நான் அவளை எப்படி அடக்கி வைத்திருக்கிறேன் தெரியுமா? என்று கூட்டிக் குறைத்து மனைவியை எச்சரித்த மாதிரியும், கண்டித்த மாதிரியும் சொல்லிக் கொள்ளலாம். அதேபோன்று மனைவி கோபத்தைத் தணிப்பதற்காக, அம்மாவை மூத்தவர்கள் என்று பார்க்கிறேன். இருப்பினும் நான் சும்மா விடவில்லை. கடுமையாகக் கண்டித்தேன் என்று கூட்டிக் குறைத்து சொல்லிக் கொள்ளலாம்.

அதுபோன்றே தாயாரின் திருப்திக்காக அங்கே ஒரு பொய் சொல்லிக் கொள்வதிலும் எந்தத் தவறும் இல்லை. ‘அம்மாவுக்காக சும்மா உன்னை சபையில் திட்டுவேன். நீ அமைதியாக அடங்கிப் போய் நின்று கொள்ள வேண்டும்’ என்று முன்கூட்டியே மனைவியிடம் சொல்லிவைத்துக் கொள்ள வேண்டும்.

அம்மாவிடம் ‘உன் மருமகளை சும்மா விடமாட்டேன். எப்படி திட்டுகிறேன் பாருங்கள்’ என்று அவர்களிடம் சொல்லிக் கொள்ளலாம். இப்படி ஒரு ஆண் நடந்து கொண்டால் தாயாரையும் மகிழ்வித்துவிடலாம். மனைவியும் புரிந்து கொண்டு நமது சந்தோஷத்திற்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்வாள். இந்த வழிமுறைகளைத் தெரிந்த ஆண்களுக்கு மாமியார் மருமகள் பஞ்சாயத்தெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. மாமியார் மருமகள் பிரச்சனைகளை இலகுவாகத் தீர்த்துவிடலாம்.

ஆனால் நம்மில் பலர், அதெப்படி பொய் சொல்ல முடியும்? பொய் சொல்வது தவறான காரியம் என்று நினைத்தால், பிரச்சனைகளைத் தீர்க்கமுடியாமல், கடைசிவரை சண்டையோடு தான் வாழவேண்டும். எனவே குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளைக் களைவதற்கும் சந்தோஷமாக வாழ்வதற்கும் இந்த அனுமதிக்கப்பட்ட பொய் முக்கியமான அம்சமாக இடம்பெற்று விடுகிறது. அதாவது நன்மையைப் பெற்றுத் தரும் காரியத்திற்காக குடும்பத்தில் பொய்கூட சொல்லிக் கொள்வதற்கு இஸ்லாம் நமக்கு அனுமதியளிக்கிறது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதே போன்று நபியவர்கள் பொதுவாகவும் அறிவித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து)  சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.

அறிவிப்பவர்: உம்மு குல்தூம் பின்த் உக்பா(ரலி)

நூல்: புகாரி 2692

இதுபோக மனைவியுடன் கணவன்மார்கள் நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் மார்க்கம் அனுமதித்த பல காரியங்களை, தவறு போன்று நம் சமூகம் விளங்கி வைத்துள்ளது. அவற்றில் மார்க்கம் எப்படியெல்லாம் இணக்கத்தைப் போதிக்கிறது என்றும், புரிந்துக் கொள்ள வேண்டும்.