Tamil Bayan Points

அகில உலகமும் அலீக்கே சொந்தம்!

பயான் குறிப்புகள்: பிற கொள்கைகள்

Last Updated on March 3, 2021 by

அகில உலகமும் அலீக்கே சொந்தம்!

அலீ ஆதரவாளர்களின் அநியாய வாதம்!

عن أبي عبد الله أنه قال: إن الدنيا والآخرة للإمام يضعها حيث يشاء ويدفعها إلى من يشأ” -”الكافي في الأصول” ص409 ج ط إيران

இம்மையும் மறுமையும் இமாமுக்கே சொந்தம்.அவர் அதைத் தான் நாடியவாறு வைப்பார். தான் நாடியவரிடம் கொடுத்து விடுவார். இவ்வாறு ஷியாக்களின் இமாமான அபூஅப்தில்லாஹ் அறிவிக்கின்றார்.

நூல்: அல்காஃபி ஃபில் உஸூல்

இங்கே இவர்கள் இமாம் என்று குறிப்பிடுவது அலீ (ரலி)யைத் தான்! இவர்கள் அலீ(ரலி)யை அல்லாஹ்வின் இடத்தில் கொண்டு போய் வைப்பது அப்படியே அப்பட்டமாகத் தெரிகின்றதல்லவா?

ஆம்! அலீயை அல்லாஹ்வாக ஆக்கி அழகு பார்க்கின்றார்கள். இந்த சித்து விளையாட்டுக்கள், ஷிர்க் வேலைகள் இவர்களிடம் சர்வ சாதாரணம்.

என்ன நெஞ்சழுத்தமும் திமிரும் இருந்தால் அல்லாஹ்வுக்குச் சொந்தமான  இம்மையையும் மறுமையையும் அலீ (ரலி)க்கு இவர்கள் சொந்தமாக்குவார்கள்?

ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் இம்மை மறுமை தனக்கே சொந்தம் என்று  குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ்வுக்கே மறுமையும், இம்மையும் உரியது.

(அல்குர்ஆன்:53:25)

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் விடமே காரியங்கள் கொண்டு செல்லப்படும்.

(அல்குர்ஆன்:3:109)

இந்த வசனத்தில் வானங்கள் பூமியின் அதிகாரம் தனக்கே சொந்தம் என்று குறிப்பிடுகின்றான். இது போன்ற வசனங்கள் திருக்குர்ஆனில் பல இடங்களில் இடம்பெறுகின்றன.  இதற்கு நேர் மாற்றமாக ஷியாக்கள், இம்மையும் மறுமையும் அலீக்கு சொந்தம் என்று வாதிடுகின்றனர்.  ஒரு பொருள் இன்னாருக்குச் சொந்தம் என்று சொன்னால் அந்தப் பொருளை அவர் உருவாக்கியிருக்க வேண்டும்.

வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள்.

(அல்குர்ஆன்:52:36)

அல்லாஹ் கேட்பது போன்று அலீ வானங்களையும் பூமியையும் படைத்திருக்க வேண்டும். அல்லது அலீக்கு வானங்களில் ஏதேனும் பங்கு இருக்க வேண்டும்.

“அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!’’ என்று (முஹம்மதே!) கேட்பீராக!

(அல்குர்ஆன்:46:4)

ஆனால் இந்த இரண்டில் எதுவும் கிடையாது. இது தான் உண்மையான இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையாகும். ஷியாக்கள் இதற்கு எதிரான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் இவர்கள் இஸ்லாத்தின் வட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார்கள்.

இவர்களின் இந்தக் கருத்தை ஒரு வாதத்திற்கு உண்மையென்று வைத்துக் கொண்டால் அலீ (ரலி) ஏன் வறுமையில் வாடினார்கள்? என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

அலீ (ரலி) அறிவித்தார்.

(என் துணைவியாரான) ‘பாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் (அவர்களை நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிறார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை.

எனவே, ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள். பின்னர், நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலி) விஷயத்தைச் சொன்னார்கள். (விபரமறிந்த) நபி (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம்.

நபி (ஸல்) அவர்கள், ‘(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள்’ என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். (அந்த அளவிற்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்தார்கள்.)

பின்னர், ‘நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் பெரியவன்’ என்று முப்பத்து நான்கு முறையும், ‘அல்ஹம்து லில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்விற்கே’ என்று முப்பத்து மூன்று முறையும், ‘சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்’ என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும்‘ என்றார்கள்.

நூல்: புகாரி 3113

இந்த ஹதீஸ் அலீ (ரலி) வறுமையில் வாடியதைத் தெளிவாக விளக்குகின்றது. அலீ (ரலி) அனுபவித்த இந்த வறுமை அவர்களுக்கு இந்தப் பூமியில் கூட அதிகாரம் இல்லை என்பதை உணர்த்துகின்றது. அதனால் ஷியாக்களின் இந்த வாதம் அபத்தமும் அநியாயமும் ஆகும் என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

அல்லாஹ்க்கு பொருத்தமில்லாத பண்புகளை அவன் மீது அள்ளி வீசுவதில் யூதர்கள் வல்லவர்கள். அந்த யூதர்களை, அதாவது தங்களின் மூலத்தையே இந்த ஷியாக்கள் மிஞ்சி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் தங்களை ஷியா ஜமாஅத்தினராகத் தடம் பதிதிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தத் தொடரின் ஊடே அவ்வப்போது பார்த்து வருகின்றோம். அதற்கு இப்போது ஓர் எடுத்துக் காட்டைப் பார்ப்போம்.

ஆகாயத்தின் அதிபதி (?) அப்துல் காதிர் ஜீலானி

தமிழகத்தில் இயங்கிவருகின்ற அத்தனை தரீக்காக்களுமே அலீ என்ற நதி மூலத்தில் தான் முடியும். ஒரு தரீக்கா கூட அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) உஸ்மான் (ரலி) ஆகிய நபித்தோழர்களிடம் போய் முடியாது.  இது எதைக் காட்டுகின்றது? இந்தத் தரீக்காக்கள் அனைத்தும் ஷியாக்களின் மறுஅவதாரங்கள் என்பதைத் தான்! சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் ஷியாக் கொள்கையைப் பின்பற்றுகின்றவர்களிடம் ஜிஷ்திய்யா  என்ற ஒரு  தரீக்கா  உண்டு.

இந்த தரீக்காவின் தெய்வீக அவதாரமும் கதாநாயகரும் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி தான். இவரைப் புகழ்ந்து யாகுத்பா  என்ற ஒரு பாடல் தமிழகமெங்கும் பாடப்படுகின்றது.  தமிழகத்தில் பிரபலமும் பிரசித்தியும் பெற்ற அந்தப் பாடல், முஹ்யித்தீனை அன்னாந்து பார்க்கின்ற வானத்தின் அதிபதியாகவும் அண்ட கோடியின் அச்சாணியாகவும் ஆக்கி அவரை உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்திருக்கின்றது. அந்தப் பாடலின்  ஆரம்ப வரிகளைப் பார்த்து வருவோம்.

அண்ட கோடியின் அச்சாணி

يا قطب أهل السماء والأرض غوثهما .

வானம், பூமி இரண்டிலும் வாழ்பவர்களின் குத்பு அவர்களே! அவ்விரண்டின் இரட்சகரே!

என்ற  புகழ்ப்பாவுக்குப் பிறகு  யாகுத்பா என்ற அரபிப் பாடல் துவங்குகின்றது. இதிலிருந்து தான் இந்தப் பாடலை யா குத்பா – குத்பை அழைத்துப் பாடப்பட்ட கவிதை என்று குறிப்பிடுகின்றனர்.

வானத்தில் வாழ்பவர்கள் என்பதற்கு மலக்குகள் என்பதைத் தவிர வேறு பொருளிருக்க முடியாது. அப்படியானால் வானவர்களின் தலைவரே! அல்லது வானவர்களுக்கும் அச்சாணி போன்றவரே! அதாவது வானவர் தலைவரான ஜிப்ரீல் (அலை), மீக்காயீல் (அலை) போன்றவர்களுக்கும் இவர் தலைவர் என்பது தான் இதன் பொருள்.

அதே போன்று பூமியில் வாழ்பவர்கள் என்பதில், நபிமார்கள், அண்ணலாரின் அன்புத் தோழர்கள், இமாம்கள் அனைவரும் அடங்குவர். அவர்கள் அனைவருக்கும் இவர் தலைவர்! அவர்களின் இரட்சகர் என்று இந்தப் பாடல் தெரிவிக்கின்றது.

மேலே நாம் கண்டது போன்று ஷியா இமாம்கள் என்ன விஷத்தைக் கக்கியிருக்கின்றார்களோ அதே விஷத்தைத் தான் இந்தப் பாடலாசிரியர் இந்த வரிகளில்  கக்கியிருக்கின்றார். இதைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படுகின்ற ஷியாக்கள் பாடுகின்றனர்.

இனம் இனத்துடன் சேரும் என்பது போன்று அந்த ஷியா இனம், இந்த ஷியா இனத்துடன் சேர்ந்திருக்கின்றது. அவர்களையும் இவர்களையும் எந்த வகையிலும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதற்காக வேண்டி இந்த எடுத்துக் காட்டு இங்கு தரப்படுகின்றது.

அல்லாஹ்வின் அதிகாரத்தை அடியார்களுக்கு மத்தியில் தாராளமாகவே பங்கிட்டுக் கொடுப்பதில் இவர்களில் யாரும் யாருக்கும் மிஞ்சியவர் கிடையாது. இதற்கு முஹ்யித்தீன் மவ்லிதில் இடம்பெற்றிருக்கக் கூடிய இன்னோர் எடுத்துக் காட்டையும் பார்ப்போம்.

ما زال يأتي عنده الدهور

كذلك الأعوام والشهور

காலங்கள் அவரிடத்தில் சதாவும் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறே  ஆண்டுகளும் மாதங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

காலங்கள், ஆண்டுகள், மாதங்கள் இவரிடம் வருகையளிக்கின்றன என்றால் அதன் பொருள் என்ன?

சூரியனும் சந்திரனும் காலத்தின் கணக்குக் காட்டிகளாக உள்ளன. இந்த சூரியனும் சந்திரனும் இவரிடத்தில் வருகையளிக்கின்றன என்றால் வானத்தின் மிகப் பிரம்மாண்டமான நட்சத்திரமான சூரியனும் பூமியின் துணைக் கோளான சந்திரனும் இவரின் ஆளுகையிலும் ஆட்காட்டி விரல் அசைவிலும் இருக்கின்றன என்பது தான் அதன் பொருள்!

‘வானம் பூமியின் அச்சாணியே’ என்று யாகுத்பா பாடலாசிரியர் வர்ணித்த வர்ணனையையும் இந்த வரிகளையும் சற்றே கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்! உணமை விளங்கும்.

அதாவது வானம் முஹ்யித்தீனுக்கு வசப்பட்டிருக்கின்றது என்று ஷியாவின் சித்தாந்தத்தை, சிந்தனையாக்கத்தை இந்த முஹ்யித்தீன் மவ்லிது ஆசிரியர் பிரதிபலிக்கின்றார். இவருடன் ஷியாவிஷம் நின்ற பாடில்லை. தமிழ் பாடல்களிலும் இந்த நாசகார நச்சுக் கருத்து எதிரொலிப்பதைப் பார்க்க முடிகின்றது.

குணங்குடி மஸ்தான் என்பவர் பாடலை பாருங்கள்:

அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள்

அடக்கி விளையாட வல்லீர்

அகிலமோர் ஏழினையும் ஆடுங்கரங்கு போல்

ஆட்டி விளையாட வல்லீர்

மண்டலத் தண்டரை அழைத்தருகிருத்தியே

வைத்து விளையாட வல்லீர்

மண்ணகமும் விண்ணகமும் அணுவைத் துளைத்ததில்

மாட்டி விளையாட வல்லீர்

கண்டித்த கடுகில் ஏழு கடலைப் புகட்டிக்

கலக்கி விளையாட வல்லீர்

கருதரிய சித்தெலாம் வல்லநீர் அடிமை என்

கண்முன் வரு சித்தில்லையோ

நண்டளந் திருநாழியாவனோ தேவரீர்

நற்குணங் குடிகொண்ட பாத்துஷாவான குரு

நாதன் முஹ்யித்தீனே!

இந்தப் பாருலகத்தை முஹ்யித்தீன் தன் கையில் பந்தாக வைத்து, ஏழு உலகத்தையும் ஆடும் தொட்டிலாக்கி, அணுவுக்குள் மண்ணையும் விண்ணையும் நுழைத்து, கடுகுக்குள் ஏழு கடலையும் புகட்டி, கலக்கி விளையாட வல்லவராம்.

இவ்வாறு குணங்குடி மஸ்தான் என்ற கவிஞன் பாடுகின்றான். மஸ்தான் என்றால் போதை ஏறியவன் என்று பொருள். மேற்கண்ட இந்தப் பாடல் வரிகளும் போதையில் தத்தளித்து தடுமாறுகின்றன.

ஷியாக்களும் அவர்களின் அடிச்சுவற்றின்  அடிபிறழாமல் அடியெடுத்து வைக்கும் பெயர்தாங்கி சுன்னத் வல் ஜமாஅத்தினரும் வானம் பூமியைத் தங்கள் வீட்டில் விளையாடுகின்ற  குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள் போன்று எண்ணிக் கொண்டு பிதற்றுகின்றனர்.

அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காணமாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! எதேனும் குறையைக் காண்கிறீரா?

இரு தடவை பார்வையைச் செலுத்திப் பார்! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும்.

(அல்குர்ஆன்:67:3, 4)

தனது படைப்பாற்றலுக்குச் சான்றாகப் பறை சாற்றுகின்ற இந்த பிரம்மாண்டமான, பிரமாதமான வானத்தைத் தான் அலீக்கும் அப்துல் காதிர் ஜீலானிக்கும் தாராளமாகத் தாரை வார்க்கின்றனர்.

இவர்களது கூற்று பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்படுவார்கள்.

(அல்குர்ஆன்:43:19)

அல்லாஹ் சொல்வது போன்று இவர்களின் சாட்சியங்கள் பதியப்பட்டு நாளை விசாரிக்கப்படுவார்கள். நரகத்தில் வீசியெறியப்படுவார்கள்.  அல்லாஹ் காப்பானாக!