Tamil Bayan Points

ஃபித்ரா எப்படி திரட்டுவது?

கேள்வி-பதில்: நோன்பு

Last Updated on November 12, 2022 by Trichy Farook

ஃபித்ரா எப்படி திரட்டுவது?

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி-15031509 ,

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்கும், பெருநாள் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள். பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.

பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.

பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.

ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத்திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகிறேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுருக்கமாக புகாரி-32755010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்துள்ளது.

ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருள்கள் குறைந்த பட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.

நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி-1551-வது ஹதீஸ் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.

எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது.